5 மொழியில் தயாராகும் படத்தில் சோலோ ஹீரோயின் ஆனார் சுனைனா
ADDED : 1327 days ago
டாப் ஹீரோயின்கள் சோலோ ஹீரோயின்களாக நடிப்பது அதிகரித்துள்ளது. நயன்தாரா, சமந்தா, த்ரிஷா, ஹன்சிகா, அமலாபால், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் சோலோ ஹீரோயினாக நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் இப்போது சுனைனாவும் சேர்ந்திருக்கிறார்.
படத்தின் பெயர் ரெஜினா. கணவனை கொன்றவர்களை தேடி புறப்படும் ஒரு பெண்ணின் கதை. இதில் வில்லனாக நிவாஸ் ஆதித்யனும், ரெஜினாவின் கணவராக அனந்த் நாக்கும் நடித்துள்ளனர். சதீஷ் நாயர் தயாரித்து, இசை அமைத்திருக்கிறார். டோமின் டி சில்வா இயக்குகிறார்.
படம் பற்றி தயாரிப்பாளர் சதீஷ் நாயர் கூறியதாவது: படத்தின் நாயகியான ரெஜினா ஒரு சாதாரண குடும்பத்து பெண். அவரது கணவரை மர்ம நபர்கள் படுகொலை செய்து விடுகிறார்கள். அவருக்கோ, கணவருக்கோ எதிரிகள் யாரும் இல்லை. அப்படி இருக்கிறபோது இந்த கொலையை செய்தவர்கள் யார் என்பதை ரெஜினா தேடிச் செல்வதே படத்தின் கதை.
கிரைம் த்ரில்லர் ஜார்னரில் படம் உருவாகி இருக்கிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் ஓடிடி தளத்தில் வெளிவருகிறது என்றார்.