சுதா கொங்கரா இயக்கும் படத்தின் நாயகன் யார் ?
கேஜிஎப் 2 படத்தைத் தயாரித்து இந்திய அளவில் பேசப்படும் தயாரிப்பு நிறுவனமாக கன்னடத் திரையுலகத்தைச் சேர்ந்த ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம் இருக்கிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியானது. தமிழில் சூர்யா 'சூரரைப் போற்று' படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்த படத்தைத் தயாரிக்கப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தப் படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கப் போவதாக சிலர் கூறி வருகிறார்கள். ஆனால், இந்தப் படத்தின் கதாநாயகன் யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லையாம். சுதா கொங்கரா, சூர்யா இணைந்து உருவாக்கப் போகும் படத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்கிறார்கள்.
சுதா தற்போது ஹிந்தியில் 'சூரரைப் போற்று' ஹிந்தி ரீமேக் படத்தை இயக்கும் வேலையில் இருக்கிறார். அதற்காக அவரது குழுவினர் மும்பையில் தங்கி கடந்த சில மாத காலமாக வேலை பார்த்து வருகிறார்கள். இந்தப் படத்தை முடித்த பிறகுதான் அவர் ஹொம்பலே பிலிம்ஸ் தயாரிக்கும் படத்துக்கு வருவார் என்கிறார்கள். சுதா, சூர்யா இணைந்து உருவாக்க உள்ள படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகுதான் அப்படம் பற்றிய நிலவரம் என்னவென்பது தெரியும்.