ஆகஸ்ட்டில் மூன்று முக்கிய படங்கள் ரிலீஸ்
தமிழ் சினிமாவில் கடந்த சில வாரங்களில் வெளிவந்த படங்களில் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படம் மட்டுமே அனைவருக்கும் லாபத்தைக் கொடுத்து பெரிய வெற்றியைப் பெற்றது. அதற்குப் பிறகு வெளிவந்த சுமார் 40 படங்களில் ஒரு சில படங்கள் மட்டுமே மிகச் சுமாரான வசூலைப் பெற்றது.
'விக்ரம்' பட அளவிற்கு இல்லை என்றாலும் ஓரளவுக்காவது லாபத்தைக் கொடுத்த படங்கள் இல்லை என்பதுதான் கோலிவுட் வட்டாரத் தகவலாக உள்ளது. அந்தக் குறையைப் போக்க இந்த மாதத்தில் மூன்று முக்கிய படங்கள் வெளியாக உள்ளன. இந்தப் படங்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வெற்றிப் படங்களாக அமையுமா என்பது படம் வெளிவந்த பிறகே தெரியும்.
கார்த்தி நடித்துள்ள 'விருமன்' நாளை மறுநாள் ஆகஸ்ட் 12ம் தேதியும், அடுத்த வாரம் ஆகஸ்ட் 18ம் தேதி தனுஷ் நடித்துள்ள 'திருச்சிற்றம்பலம்' படமும், மாதக் கடைசியில் ஆகஸ்ட் 31ம் தேதி விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' படமும் வெளியாக உள்ளன. இந்தப் படங்களுடன் போட்டியாக பெரிய படங்கள் வெளியாகவில்லை. சில கூடுதல் விடுமுறை நாட்களும் இந்தப் படங்களுக்குக் கிடைக்க உள்ளதால் நன்றாக வசூலிக்க நல்ல வாய்ப்பு. எந்தப் படம் எப்படி போகப் போகிறது என்பதற்கு மாதக் கடைசி வரை காத்திருப்போம்.