உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை

வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை


நடிகை ராஷ்மிகா மந்தனா, கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் வரை சென்று பின்னர் நின்றது. அதன்பின்னர், படங்களில் நடிப்பதை தொடர்ந்த ராஷ்மிகா, சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், ராஷ்மிகாவின் தாயார் பேசியதாக ஒரு ஆடியோ வைரலாக பரவியது.

அதில், ராஷ்மிகா சினிமாவில் நடிப்பதை நிறுத்துமாறு ரக்ஷித் ஷெட்டி சொன்னதாகவும், ராஷ்மிகா முத்தக்காட்சியில் நடித்ததற்கு ரக்ஷித் கோபமடைந்ததாகவும் பேசியிருக்கிறார். இந்த ஆடியோ வைரலானதை அடுத்து, ராஷ்மிகா மன்னிப்பு கேட்க வேண்டும் என ரக்ஷித் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ராஷ்மிகா தனது 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஊடகங்கள் மற்றும் இணையத்தில் உள்ள சில தனிநபர்களிடமிருந்து வந்து துன்புறுத்தல்கள், தவறான தகவல்கள், தனிப்பட்ட தாக்குதல்களை நான் எதிர்கொண்டு 8 ஆண்டுகள் ஆகின்றன. வியூஸூக்காகவும், ரீச்சுக்காகவும், என்கேஜ்மென்டுக்காகவும், நான் சொல்லும் வார்த்தைகளும், தவறான தகவல்களும், வெறுப்பும் பரப்படுவதை நான் கவனித்திருக்கிறேன். இவை அனைத்தும் எனக்கு வேதனையையும், காயத்தையும் ஏற்படுத்தினாலும், நான் தொடர்ந்து பொறுமையாகவும், அமைதியாகவும் இருந்தேன்.

சில நேரங்களில் நியாயமற்ற விமர்சனங்களையும் நான் ஏற்றுக்கொண்டேன். ஆனாலும், எனக்கு நான் உண்மையாக இருந்து, அன்பையும், மகிழ்ச்சியையும் என்னை சுற்றி இருப்பவர்களுக்கு கடத்திவந்தேன். ஆனால், கடந்த 24 மணி நேரத்தில் எல்லை மீறப்பட்டுவிட்டது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக நம்பப்படும் பழைய, தனிப்பட்ட உரையாடல்களை சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் இல்லாமல் பரப்பி வருகிறார்கள்.

அந்த உரையாடலில் ஒரு சிறிய பகுதி வேண்டுமென்றே நீக்கப்பட்டு, சங்கடமான சர்ச்சையை உருவாக்கியுள்ளார்கள். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அண்மையில் நடந்த சம்பவத்தை நோக்கமாக கொண்டு இவை பரப்பப்படுகிறது. அவர்களால் இதை வைத்து என்ன செய்ய முடியும்..? என் குடும்பத்தினரையும், என் நலம் விரும்பிகளையும், நண்பர்களையும், இந்த விஷயத்தில் தொடர்பு இல்லாதவர்களையும், அசவுகரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். இது முழுக்க முழுக்க ஒருவரின் தனியுரிமை மீதான தாக்குதல்.

தவறான தகவல்களையும், அவதூறான தகவல்களையும் பரப்பி வருகிறார்கள். வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு முன்னேறி, வளர்ச்சியை நோக்கி நேர்மறையைப் பரப்பும் அதே வேளையில், ஒரு சிலர் மற்றொரு நபரின் கண்ணியத்தையும் அமைதியையும் விலையாகக் கொடுத்து வெறுப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது. 8 ஆண்டுகளாக இந்த தாக்குதல் என் மீது மட்டும் இருந்தபோது அமைதி காத்தேன். ஆனால் இன்று அது மற்றவர்களையும் பாதிக்கும்போது நான் அமைதியாக இருக்க முடியாது. பொறுமைக்கும் எல்லை உண்டு. 24 மணி நேரத்தில் என்னைப் பற்றி பரவும் தவறான தகவல்களையும் ஊடகத்தினர், தனிநபர்கள், இன்புளூயன்ஸர்கள் அனைவரும் நீக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !