மோகன்லாலின் திரிஷ்யம்-3 விரைவில்!
ADDED : 1149 days ago
மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான படம் திரிஷ்யம். மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்த படத்தின் தமிழ் ரீமேக் பாபநாசம் என்ற பெயரில் உருவானது. கமலஹாசன், கவுதமி முக்கிய வேடத்தில் நடித்தார்கள். தமிழில் வெற்றி பெற்ற அப்படம் தெலுங்கு, கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்தாண்டு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் மலையாளம் மற்றும் தெலுங்கில் வெளியானது. இந்த நிலையில் தற்போது திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகம் உருவாகப் போவதாக மலையாள சினிமாவில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகளை இயக்குனர் ஜீத்து ஜோசப் தொடங்கிவிட்டதாகவும், முதல் இரண்டு பாகங்களில் நடித்த மோகன்லால், மீனா, ஆஷா சரத், எஸ்தர் அணில் ஆகியோரே மூன்றாம் பாகத்திலும் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.