ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா... சினிமா கொண்டாடும் நயன்தாரா
நடிகர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும் தமிழ் திரையுலகில் தனக்கென்று தனிப்பாதை அமைத்து, தடைகள் பல கடந்து இன்று 'லேடி சூப்பர் ஸ்டார்-ஆக வலம் வரும் நடிகை நயன்தாரா இன்று(நவ., 18) தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தாண்டு அவருக்கு ரொம்பவே ஸ்பெஷல் ஆண்டு. நீண்டகால காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்தார். அதோடு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கும் தாய் ஆனார். இந்த பிறந்தநாளை கணவர் மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடுகிறார். நயன்தாரா இன்று நம்பர் 1 நடிகையாக இருந்தாலும் அவர் வாழ்வில் போராட்டாங்கள் ஏராளம் என்றே சொல்லலாம். நயன்தாராவின் சினிமா பயணத்தை பற்றிய ஒரு தொகுப்பு....
நடிகை நயன்தாராவின் பூர்வீகம் கேரளா என்றாலும் பிறந்தது பெங்களுருவில் தான். 1984ல் நவ., 18ல் குரியன் கொடியட்டு - ஓமனா குரியன் ஆகியோரின் மகளாக பிறந்தார் டயானா மரியம் குரியன். இவரது தந்தை விமானப்படையில் பணிபுரிந்து வந்ததால் தனது பள்ளிப் படிப்பினை டில்லி, குஜராத், கேரளா ஆகிய மாநிலங்களில் பயின்றார்.
பின்னர் தனது சொந்த ஊரான திருவல்லாவில் உள்ள மர் தோமா கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். கல்லூரி பருவத்திலேயே பகுதி நேர வேலையாக மாடலிங் செய்து வந்தார் நயன்தாரா. 2003ல் மலையாள திரைப்பட இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கிய மனசினக்கரே என்ற படம் மூலம் ஜெயராம் ஜோடியாக நடித்து நாயகியாக அறிமுகமானார்.
சினிமா உலகிற்குள் நுழைந்தாலும் ஆரம்ப காலங்களில் பலரால் நிராகரிக்கப்பட்ட கசப்பான அனுபவங்களும் நயன்தாராவின் திரைப்பயணத்தில் உண்டு. 2005ல் கே பாலசந்தர் தயாரிப்பில் ஹரி இயக்கிய ஐயா படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நயன்தாராவின் முதல் தமிழ்படமே வெற்றிப்படமாக அமைந்ததன் விளைவு, இயக்குநர் பி வாசு இயக்கத்தில் வெளிவந்து இமாலய வெற்றி பெற்ற திரைப்படமான சந்திரமுகியில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியானார். தொடர்ந்து கஜினி, வல்லவன், ஈ, பில்லா, யாரடி நீ மோகினி போன்ற படங்களில் இவரது நடை, உடை, பாவணை அனைத்தும் முற்றிலும் மாறுபட்டு இவரது நடிப்பே வேறொரு கோணத்தில் பரிணமித்தது.
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வந்த நயன்தாரா சில காதல் சர்ச்சைகளில் சிக்கியதன் விளைவு அவரது திரைப் பயணத்தில் ஒரு தற்காலிக சுணக்கத்தை ஏற்படுத்தியது. தமிழ் திரையுலகில் பல நடிகைகள் இவ்வாறு காதல் சர்ச்சைகளில் சிக்கி தங்களது திரை வாழ்க்கையை தொலைத்திருக்கின்றனர். அவ்வாறு இல்லாமல் இவர் ஒவ்வொரு சர்ச்சைகளில் இருந்தும் மீண்டு, திரும்பவும் தன் இடத்தைப் பிடித்தார்.
ராஜா ராணி படத்திற்கு பின் வலுவான கதாபாத்திரங்கள் கொண்ட திரைப்படங்களிலும், தனது கதாபாத்திரத்தை சுற்றிச் சுழலும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்தார். மாயா, நானும் ரௌடி தான், டோரா, வாசுகி, அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் போன்ற திரைப்படங்கள் இவரது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தந்த பாடங்களாகவும், ஆண் நடிகர்களுக்கு இணையாக இவரை உயர்த்திக் காட்டிய திரைப்படங்களாகவும் அமைந்தன.
நடிகர்கள் மட்டுமே கோலோச்சியிருக்கும் தமிழ் திரையுலகில் ஒரு நடிகையின் திரைப்படம் காலை 5 மணி சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது என்றால் அது நயன்தாரா நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற கோலமாவு கோகிலாவைத் தவிர வேறொன்றும் இல்லை.
பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த நயன்தாரா இந்து மதத்தின் மீது இருந்த பற்றின் காரணமாக வேதமந்திரங்கள் சொல்லி பாரம்பரிய முறைப்படி இந்து மதத்திற்கு மாறியுள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் 60க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
நானும் ரவுடிதான் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்த நயன்தாரா இந்தாண்டு ஜூன் மாதம் அவரை திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து நான்கே மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார். இது பெரும் சர்ச்சையானது. ஆனாலும் எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார் இந்த அழகு தேவதை.
சினிமா முதல் தனது தனிப்பட்ட வாழ்க்கை பல பிரச்னைகளையும், ஏமாற்றங்களையும் சந்தித்த நயன்தாரா அதனால் உடைந்து போய் உட்காராமல் அனைத்து தூக்கி எறிந்து விட்டு என் வாழ்க்கை பயணம் இது தான் என லேடி சூப்பர் ஸ்டாரா, தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகையாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.