உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்த முறையாவது ரிலீஸாகுமா தமிழரசன்

இந்த முறையாவது ரிலீஸாகுமா தமிழரசன்

விஜய் ஆண்டனி நடிப்பில் படங்கள் வெளியாகி ஒரு மிகப்பெரிய இடைவெளி விழுந்து விட்டது. அதே சமயம் தற்போது விஜய் ஆண்டனியின் கைகளில் தான் அதிக படங்களும் இருக்கின்றன என்பது ஆச்சரியம் தரும் இன்னொரு தகவல். இவர் நடித்த சில படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. சில படங்கள் போஸ்ட் புரடக்சனில் இருக்கின்றன. அந்த வகையில் விஜய் ஆண்டனிக்கு தமிழரசன் மற்றும் பிச்சைக்காரன் 2 ஆகிய படங்கள் தான் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தமிழரசன் திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக போஸ்டருடன் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆனால் இப்படி இந்தப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுவது இது ஐந்தாவது முறை. இதற்கு முன்பு நவம்பர் 18, டிசம்பர் 30, ஜனவரி 26, மார்ச் 31 என பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, தற்போது ஏப்ரல் 14 ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக அருண் விஜய்யின் பார்டர் திரைப்படம் தான் இப்படி ரிலீஸ் தேதி அறிவிப்பால் சாதனை செய்து வந்தனர்.

இந்தநிலையில் தமிழரசன் ரிலீஸாகும் இதே தேதியில் இன்னும் சில படங்கள் வெளியாக இருப்பதால் ஒருவேளை மீண்டும் இதன் ரிலீஸ் தேதி மாற்றப்படுமா இல்லை, இந்த தேதியில் உறுதியாக இருப்பார்களா என்பது வரும் நாட்களில் தான் தெரியும்.

பாபு யோகேஸ்வரன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் மலையாள நடிகர் சுரேஷ் கோபி மற்றும் பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த 2019 ஜனவரியில் துவங்கப்பட்ட இந்த படம் அதே வருடம் டிசம்பர் மாதத்திலேயே படப்பிடிப்பு முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !