உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராதிகா தயாரிப்பில் எஸ்ஏ சந்திரசேகர் நடிக்கும் சீரியல் துவங்கியது

ராதிகா தயாரிப்பில் எஸ்ஏ சந்திரசேகர் நடிக்கும் சீரியல் துவங்கியது

தமிழ் சினிமாவில் 80களில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி இயக்குனர்களில் ஒருவரகாக இருந்தவர் எஸ்ஏ சந்திரசேகர். 90களின் துவக்கத்திலேயே தனது மகன் விஜய்யை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி தொடர்ந்து அவரை வைத்து சில இளமை ததும்பும் படங்களை எடுத்து அவரையும் ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தார்.

சமீப காலமாக எஸ்ஏ சந்திரசேகர் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். “டிராபிக் ராமசாமி, கொடி, நான் கடவுள் இல்லை, மாநாடு” ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். தற்போது எஸ்ஏ சந்திரசேகர் டிவி தொடர் ஒன்றில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

ராதிகா சரத்குமார் தயாரிக்க உள்ள அந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்ஏ சந்திரசேகர் நடிக்கிறாராம். இது குறித்து ராதிகா, “வாழ்க்கை நம்மை பல்வேறு பயணங்களுக்கு அழைத்துச் சென்று பல விஷயங்களைக் கற்றுத் தருகிறது. நமக்கு நாமே சிறந்த வடிவத்தில் வளர்கிறோம். எஸ்ஏ சந்திரசேகர் சார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க மற்றும் சிறந்த நடிகர்கள், கலைஞர்களுடன் விஜய் டிவியில் 'கிழக்கு வாசல்' என்ற தொடரை ஆரம்பித்துள்ளோம், அனைவரின் வாழ்த்துகளும் தேவை,” என்று குறிப்பிட்டுள்ளார்.

மகன் விஜய் தமிழ் சினிமாவில் நம்பர் 1 வசூல் நடிகராக இருக்க, அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகர் டிவி தொடரில் நடிக்க ஆரம்பித்திருப்பது ஆச்சரியமான ஒன்றுதான். இத்தொடரில் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ்வும் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !