எந்தப் படம் என சொல்லாமல் விஷ்ணு விஷால் பதிவு
தனுஷ் இயக்கம் நடிப்பில் உருவாக உள்ள அவரது 50வது படத்தைப் பற்றி பல செய்திகள் கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் பலரும் பலவிதமான தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
அந்தப் படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. ஆனால், படத்தைப் பற்றிக் குறிப்பிடாமல், “அந்தப் படம்” என்று மட்டும் குறிப்பிட்டு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் விஷ்ணு விஷால்.
“அந்தப் படத்தில்' நானும் பங்கேற்கிறேன் என சுற்றிக் கொண்டிருக்கும் வதந்திகள் எதுவும் உண்மையில்லை. அப்படத்தில் எனக்கும் பங்கேற்க ஆசைதான். ஆனாலும், விளக்க வேண்டும். எனது மற்ற கடமைகளால் இதில் பங்கேற்க முடியவில்லை. படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள். அனைத்து ரசிகர்களுக்கும் மன்னிக்க,” என்று தெரிவித்துள்ளார்.
தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் 'லால் சலாம்' படத்தில் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடிப்பதற்காகத்தான் தனுஷ் 50 படத்தை விஷ்ணு விஷால் மறுத்தார் என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.