உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஆதிபுருஷ்' படத்திற்குத் தடை கேட்கும் இந்திய சினிமா பணியாளர் சங்கம்

'ஆதிபுருஷ்' படத்திற்குத் தடை கேட்கும் இந்திய சினிமா பணியாளர் சங்கம்

பிரபாஸ், கிரித்தி சனோன், சைப்அலிகான் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'ஆதிபுருஷ்'. இப்படம் குறித்து பல்வேறு விதமான சர்ச்சைகள் எழுந்து வருகிறது. ராமாயணக் கதாபாத்திரங்களின் தவறான சித்தரிப்பு, முறையற்ற வசனங்கள் என ஒரு சாரார் படத்திற்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அகில இந்திய சினிமா பணியாளர் சங்கம் சார்பில் படத்தைத் தடை செய்ய வேண்டுகோள் விடுத்து இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில், “இப்படத்தின் திரைக்கதை, வசனம் ஆகியவை ராமரையும், அனுமனையும் தவறாக சித்தரித்து களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்துக்களின் சென்டிமென்ட்டையும், சனாதன தர்மத்தையும் அவமதிக்கும் விதத்தில் உள்ளது. ராமர், ஏன் ராவணன் கதாபாத்திரம் கூட வீடியோ கேம் போல தோற்றமளிக்கிறது. படத்தின் வசனங்கள் ஒவ்வொரு இந்தியருக்கும் வலியை ஏற்படுத்துகிறது. இப்படத்தின் திரையிடலை உடனடியாகத் தடை செய்ய வேண்டும், வரும் நாட்களில் ஓடிடி தளத்திலும் படத்தை வெளியிடக் கூடாது.

படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குனர், எழுத்தாளர் ஆகியோர் மீது உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். இந்திய சினிமாவின் மோசமான வரலாற்றில் இடம் பிடித்துள்ள இந்தப் படத்தில் பிரபாஸ், கிரித்தி சனோன், சைப் அலிகான் ஆகியோர் நடித்திருக்கக் கூடாது. ஸ்ரீராமர் மீதும், ராமாயணத்தின் மீதும் உள்ள நம்பிக்கையை 'ஆதிபுருஷ்' மொத்தமாகக் கெடுத்துவிட்டது,” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !