சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் 17ம் தேதி ஆஜராக நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன்
சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஏடிஜிபி வெங்கடேஷ் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு 2 வழக்குகளை பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்குகளில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 வழக்குகளிலும் முதல் நபராக சேர்க்கப்பட்டு உள்ள உன்னிகிருஷ்ணன் போத்தியுடன் பிரபல நடிகர் ஜெயராமுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
சபரிமலையில் இருந்து சென்னைக்கு கொண்டு சென்ற தங்கத் தகடுகளை வைத்து உன்னிகிருஷ்ணன் போத்தி நடத்திய பூஜைகளில் நடிகர் ஜெயராம் கலந்து கொண்ட வீடியோ வெளியாகி இருந்தது. மேலும் சென்னையில் உள்ள ஜெயராமின் வீட்டில் வைத்தும் பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த மாதம் அவரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது.
அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் நடிகர் ஜெயராமை சாட்சியாக சேர்க்க சிறப்பு புலனாய்வுக் குழு தீர்மானித்தது. இதற்கிடையே தங்கம் திருட்டு தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இந்தநிலையில் நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை தீர்மானித்துள்ளது. அதன்படி வரும் 17ம் தேதி கொச்சியில் உள்ள அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.