ஓடிடியில் வெளியாகும் சன்னி லியோன் படம்
ஹிந்தியில் அனுராக் காஷ்யப் எழுதி இயக்கியுள்ள படம், 'கென்னடி'. சர்வதேச திரைப்பட விழாக்களில் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை குவித்த இப்படம், வரும் 20ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்தப் படத்தில் ராகுல் பட், சன்னி லியோன், மோஹித் தகல்கர், மேகா பர்மன், அமீர் தல்வி, அபிலாஷ் தாப்லியால், கரிஷ்மா மோடி நடித்துள்ளனர்.
படம் குறித்து சன்னி லியோன் கூறும்போது, “இப்படம் ஒரு நடிகையாக, என்னை முற்றிலும் வேறொரு உணர்ச்சி உலகிற்குள் தள்ளியது. இதில் நான் சார்லி கேரக்டரில் நடித்துள்ளேன். சார்லி மர்மமும், நுட்பமும், வலிமையும் ஒருசேர கொண்டவள். அவளது பயணத்தை ஆராய்வது சவாலானதும், நிறைவை தருவதுமான ஒரு அனுபவம்.
அனுராக் காஷ்யப்புடன் இணைந்து பணியாற்றியது, உரையாடலை விட மவுனத்தை கொண்டாட கற்றுக்கொடுத்தது. இதுவரை அனுபவிக்காத விதங்களில் இப்படம் எனக்கு மிகப்பெரிய சவால்களை ஏற்படுத்தி கொடுத்தது. ரசிகர்கள் மும்பையின் இருண்ட, அழகான ஒரு உலகத்தை அனுபவிப்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்க” என்றார்.