ராமராஜன், நளினி பிரிவுக்கு நான் காரணமில்லை: சேது அபிதா திடீர் விளக்கம்
'சேது' படத்தில் விக்ரம் ஜோடியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் அபிதா. அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்தார். திடீரென சினிமாவை விட்டு விலகினார். சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு 'ஊருக்கு ரெண்டு ஊதாரி' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படம் குறித்து அவர் மீடியாக்களிடம் பேசி வருகிறார். அப்போது அவரிடம் ராமராஜன், நளினி பிரிவுக்கு காரணம் நீங்கள்தான் என்ற செய்திகள் வெளியானது குறித்து அவரிடம் கேட்டபோது, “அப்போது பரவிய இந்த தகவலால் நான் மனதளவில் பாதிக்கப்பட்டேன். தினமும் அழுதபடி இருப்பேன். ராமராஜன் என்னைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்றெல்லாம் வதந்தி கிளப்பினார்கள். அது உண்மையென்றால் அப்போதே நடந்திருக்க வேண்டுமே. அப்படி எதுவும் நடக்கவில்லை. காரணம், அது பொய்யான தகவல். எனக்கு ஆதரவாக எனது குடும்பத்தார் எனக்கு ஆதரவாக நின்றார்கள். அதனால்தான் அந்த பாதிப்பிலிருந்து விடுபட்டு வந்தேன்” என்று கூறியுள்ளார்.
ராமராஜன், நளினி தம்பதி கடந்த 2000ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இவர்களது விவாகரத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. அதில் ஒன்றுதான், ராமராஜன், அபிதா காதல். இருவரும் காதலிப்பதாலேயே நளினியை ராமராஜன் பிரிந்துவிட்டார் என்றும் பேசப்பட்டது. அப்போது இது பற்றி எதுவும் பேசாத அபிதா, 26ஆண்டுகள் கழித்து இப்போது பேசியிருக்கிறார்.