மீண்டும் பைக் சுற்றுப் பயணத்தில் அஜித் - அப்போ ‛விடாமுயற்சி'...?
துணிவு படத்தின் வெற்றிக்கு பின் அஜித்தின் 62வது படமாக ‛விடாமுயற்சி' உருவாக உள்ளது. முன்னதாக இவரின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் அவர் நீக்கப்பட்டார். இப்போது மகிழ்திருமேனி அஜித்தின் படத்தை இயக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியாகி சில மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் படப்பிடிப்பு துவங்கவில்லை. படத்திற்கான திரைக்கதை வேலைகளில் மகிழ்திருமேனி ஈடுபட்டுள்ளதாலும், அஜித்தின் பைக் சுற்றுப்பயணத்தாலும் இந்த படம் துவங்க தாமதமாகிறது என தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் தான் பைக் சுற்றுபயணத்தை முடித்து அஜித் சென்னை திரும்பினார். இதனால் இந்தமாதம் முதல் ‛விடாமுயற்சி' படம் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று காலை முதல் அஜித் பைக் சுற்றுபயணத்தில் ஈடுபட்டுள்ள போட்டோக்கள் வைரலாகின. அவர் ஐரோப்பாவில் பைக் பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கையில் விடாமுயற்சி படம் இப்போது துவங்க வாய்ப்பில்லை என தகவல்கள் பரவி வருகின்றன.
இதுபற்றி விசாரித்ததில், அஜித் தற்போது மேற்கொண்டுள்ள சுற்றுபயணம் 15 நாட்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதை முடித்து வந்ததும் இந்த மாத இறுதியில் ‛விடாமுயற்சி' படப்பிடிப்பை துவங்க உள்ளதாக கூறுகின்றனர்.