ஜார்ஜியாவில் பாடல் காட்சியுடன் ‛சந்திரமுகி 2' படப்பிடிப்பு நிறைவு
ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. ரஜினிகாந்த்திற்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்ததுடன் ஜோதிகாவிற்கு திருப்புமுனையான படமாகவும் அமைந்தது. இந்த நிலையில் 18 வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகமாக சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகியுள்ளது.
முதல் பாகத்தை இயக்கிய பி.வாசுவே இந்த படத்தையும் இயக்கியுள்ளார். கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்க, கதாநாயகிகளாக கங்கனா ரணவத், மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட வேண்டி இருந்தது. இதைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு ராகவா லாரன்ஸ், மஹிமா நம்பியார் உள்ளிட்ட படக்குழுவினர் ஜார்ஜியா நாட்டிற்கு கிளம்பி சென்றனர். இந்த பாடல் படப்பிடிப்பை தற்போது நிறைவு செய்து திரும்பியுள்ளனர். படம் வரும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமாக வெளியாக இருக்கிறது.