தேனிக்கு பயணிக்கும் பவதாரிணி உடல் : சென்னையில் திரையுலகினர் அஞ்சலி
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி உடல்நலக்குறைவு காரணமாக ஜன., 25ல் இலங்கையில் காலமானார். புற்று நோய் காரணமாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்று உள்ளார். சிகிச்சை பலனளிக்காத நிலையில் இலங்கையில் காலமானார்.
அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி
பின்னர் விமான நிலையத்தில் இருந்து தி.நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்திற்கு பவதாரிணி உடல் கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மத்திய அமைச்சர் எல் முருகன், அமைச்சர் உதயநிதி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.
திரையுலகினர் அஞ்சலி
சிவக்குமார், கார்த்தி, விஷால், வெங்கட் பிரபு, குட்டி பத்மினி, ராதிகா, விஜய் ஆண்டனி, சேரன், லிங்குசாமி, பரத்வாஜ், மோகன் ராஜா, மனோஜ் பாரதிராஜா, ராமராஜன், ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, சுஜாதா, ஸ்வேதா மோகன், சூரி, ஆர்.கே செல்வமணி, பேரரசு, பாக்யராஜ், சுஹாசினி, இயக்குனர்கள் எழில், அமீர், ராம், சந்தான பாரதி, வெற்றிமாறன், சுரேஷ் காமாட்சி, சுதா, பிரியா, இளன், இசையமைப்பாளர் தினா, பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், ரஹ்மான் மகன் அமீன், மிர்ச்சி சிவா உள்ளிட்ட வெங்கட்பிரபு அணியினர் உள்ளிட்டோர் பவதாரிணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் இளையராஜாவின் இசை குழுவில் பணியாற்றும் பாடகர்கள், இசைக்கலைஞர்கள் உள்ளிட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் பவதாரிணி உடலை இளையராஜாவின் சொந்த ஊரான தேனிக்கு பிரத்யேக ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்றனர். தேனி மாவட்டம் லோயர் கேம்ப் பகுதியில் இளையராஜாவின் அம்மா சின்னத்தாய் மற்றும் மனைவி ஜீவாவின் சமாதி அருகே பவதாரிணியின் உடல் நாளை(ஜன., 27) நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. முன்னதாக பவதாரிணி உடலுக்கு சென்னையில் ஓதுவார்கள் வந்து சிவபுராணம் பாடினர்.
இளையராஜா குடும்பத்திற்கு நெருங்கிய நண்பரான நடிகர் சுப்பு மஞ்சு உடன் இருந்து எல்லா பணிகளையும் செய்தார். மேலும் விஷால், சிம்பு ஆகியோர் பவதாரிணி உடல் சென்னை கொண்டு வரப்பட்டது முதல் தேனிக்கு எடுத்துச் செல்லப்படும் வரை உடன் இருந்து வழியனுப்பி வைத்தனர்.
அன்பு மகளே... - இளையராஜா உருக்கம்
மகள் பவதாரிணி மறைவு குறித்து இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில் 'அன்பே மகளே...' என குறிப்பிட்டு பவதாரிணி குழந்தையாக இருந்தபோது எடுக்கப்பட்ட போட்டோவை பகிர்ந்துள்ளார்.
போனில் இரங்கல் தெரிவித்த ரஜினி
இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் அளித்த பேட்டியில், பவதாரிணியின் மறைவு மிகவும் வருத்தம் தருகிறது. இளையராஜாவிடம் தொலைபேசியில் இரங்கல் தெரிவித்தேன்' என கூறிவிட்டு லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு சென்றார்.