'உத்தம வில்லன்' விவகாரம் : தயாரிப்பாளர் தேனப்பன் விளக்கம்
இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்த படம் 'உத்தம வில்லன்'. கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த அந்தப் படம் தோல்விப் படமாக அமைந்து பெரும் நஷ்டத்தைக் கொடுத்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற 'போகுமிடம் வெகு தூரமில்லை' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் பிஎல் தேனப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசுகையில், “இப்போது பெரிய பிரச்சனையா போயிட்டிருக்கிறது 'உத்தம வில்லன்' பஞ்சாயத்து, மற்றும் மைக்கேல் ராயப்பன் பஞ்சாயத்து. சிம்புவை வச்சி 'வல்லவன்' படத்தை தயாரிச்சிருக்கிறேன். 'உத்தம வில்லன்' படத்தைப் பத்தி பேச எனக்கு என்ன உரிமை இருக்குன்னா, அந்த சமயத்துல தயாரிப்பாளர் சங்கத்துல நான்தான் செயலாளரா இருந்தேன்.
அப்ப கமல் சார் கடிதம் கொடுத்தாருங்கறது உண்மை. அந்தப் படத்துக்காக திருப்பதி பிரதர்ஸ் எந்த முதலீடும் பண்ணலை. பணம் கொடுத்தது ஈராஸ். அதை செட்டில் பண்ணது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. அடுத்த நாளே அந்த கடிதத்தோட காப்பிரைட்டை ஞானவேல் ராஜாவுக்கு கொடுத்துட்டாங்க. எனக்குத் தெரிஞ்சு இது குறித்து கேக்கறது திருப்பதி பிரதர்ஸ்கு எந்த சம்பந்தமும் இல்லை. அப்படியே கேக்கணும்னா ஞானவேல் ராஜாதான் கேக்கணும். நான் அவருக்கு போன் பண்ணி கேட்டதுக்கு என்னைக்கும் கமல் சாருக்கு சப்போர்ட்டுதான்னு சொன்னாரு.
கமல் சாரை வச்சி மூணு படம் தயாரிச்சிருக்கேன். ரெண்டு படம் இணை தயாரிப்பாளரா இருந்திருக்கேன். ராஜ்கமல்ல 19 படம் மேனேஜரா வேலை பார்த்திருக்கேன். எனக்குத் தெரியும் கமல் சாரைப் பத்தி. 2015 மே மாசம் கூப்பிட்டு அவரு அக்டோபர், நவம்பர், டிசம்பர் தேதி கொடுக்கறன்னு சொன்னாரு. இவங்களால பணம் புரட்ட முடியல. இதான் உண்மை. அப்புறம் ஆகஸ்ட் மாசம் போன் பண்ணி, தேதி வேற யாருக்காவது கொடுத்துடுங்கன்னு சொல்லிட்டாங்க. ஆனால், இப்ப தேவையில்லாம கமல் சாரை வச்சி செஞ்சிட்டிருக்காங்க,” என்றார்.
இத்தனை வருடங்களாக நீண்டு கொண்டிருக்கும் இந்த பஞ்சாயத்து எப்போது முடியும் என்பது இழுபறிதான்.