விஜய் சேதுபதியின் புதிய சாதனை : புர்ஜ் கலிபாவின் கீழ் வேலை பார்த்தவர், உச்சியில் தோன்றினார்
விஜய்சேதுபதி நடிப்பில் அடுத்து வெளிவரும் படம் 'மகாராஜா'. இது அவரின் 50வது படம். 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இயக்கி உள்ளார். மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப், பாரதிராஜா உள்பட பலர் நடித்துள்ளனர். வருகிற 14ம் தேதி படம் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து படத்தின் புரமோஷன் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக விஜய் சேதுபதியின் 50வது படம் என்பதால் இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் துபாயில் உள்ள புர்ஜ் கலிபாவில் 'மகாராஜா' பட விளம்பரம் திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் அனுராக் கஷ்யப் கலந்து கொண்டார் மற்றும் நிகழ்வில் படக்குழுவினரும் இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியின்போது விஜய்சேதுபதி கண்கலங்கினார். அதற்கு காரணம் 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே புர்ஜ் கலிபாவின் அருகில் உள்ள இடத்தில் தான் விஜய்சேதுபதி கட்டிட பணியாளராக பணியாற்றினார். இப்போது தனது 50வது படத்தின் மூலம் புர்ஜ் கலிபாவின் உச்சியில் மின்னினார்.