உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இளையராஜாவால் பதிப்புரிமை கோர முடியாது - நீதிமன்றத்தில் தகவல்

இளையராஜாவால் பதிப்புரிமை கோர முடியாது - நீதிமன்றத்தில் தகவல்

இளையராஜா இசையமைத்த நாலாயிரத்து ஐநூறு பாடல்களை பயன்படுத்தும் உரிமை எங்களிடத்தில் உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் எக்கோ இசை நிறுவனம் மேல்முறையீடு செய்திருக்கிறது. இந்த வழக்கு குறித்த விசாரணையில் நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது சபிக் ஆகியோர் பெஞ்சில் நடைபெற்றது. அப்போது எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், சம்பளம் கொடுத்து திரைப்படங்களுக்கு இசையமைக்க வைக்கும் தயாரிப்பாளர்தான் அந்த பாடலின் பதிப்புரிமைக்கான முதல் உரிமையாளர் ஆவார். அதனால் தயாரிப்பாளர்களிடமிருந்து இளையராஜா இசையமைத்த நாலாயிரத்து ஐநூறு பாடல்களை எக்கோ நிறுவனம் வாங்கிவிட்டது.

இது குறித்து இளையராஜாவுடன் எக்கோ நிறுவனம் ஒப்பந்தம் போடவில்லை. என்றாலும் 1990 ஆம் ஆண்டு வரை அவருக்கு ராயல்டி கொடுக்கப்பட்டது. அதை யடுத்து நிறுத்தப்பட்டது. அந்த வகையில், 1970 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை இளையராஜா இசையமைத்த பாடலுக்கான பதிப்புரிமை தன்னிடம் மட்டுமே இருக்கும் என்று இளையராஜா எந்த தயாரிப்பாளரிடத்திலும் ஒப்பந்தம் போடவில்லை. அதனால் அந்த பாடல்களுக்கு அவரால் உரிமை கோர முடியாது என்று எக்கோ நிறுவன வக்கீல் வாதாடி இருக்கிறார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணை ஜூன் 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வாதத்தில் ஏ. ஆர். ரகுமான், தான் இசையமைக்கும் பாடல்களின் பதிப்புரிமையை யாருக்கும் கொடுப்பதில்லை. ஆனால் இளையராஜா பதிப்புரிமையை தயாரிப்பாளர்களுக்கு கொடுத்து விட்டார் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !