புதுமுகங்கள் உருவாக்கும் படத்திற்கு தனது பாடலை கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்
ஒயிட் பெதர் ஸ்டூடியோஸ் சார்பில் ஐஸ்வர்யா, எம்.சுதா ஆகியோர் தயாரித்துள்ள படம் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு'. இந்த படத்தை வெங்கட் பிரபு உதவியாளர் அனந்த் இயக்குகிறார். இவர் ஹிப் ஆப் ஆதியின் தம்பியாக 'மீசைய முறுக்கு' படத்தில் நடித்திருந்தார். மேலும் சில படங்களில் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்கி இருப்பதாடு அவரே நாயகனாகவும் நடித்திருக்கிறார்.
லீலா, குமாரவேல், விஷாலினி, பவானிஶ்ரீ, ஆர்.ஜே.விஜய், இர்பான், வில்ஸ்பட், தேவ், கே.பி.ஒய். பாலா, மோனிகா, ஆர்.ஜே.ஆனந்தி, குகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வெங்கட்பிரபு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். காஷிப் இசை அமைத்துள்ளார், தமிழ் செல்வன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மசாலா பார்ப்கார்ன் நிறுவனம் தயாரித்துள்ளது.
படம் பற்றி இயக்குனர் அனந்த் கூறும்போது ''நண்பன் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது. 1992 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் நடப்பது போன்று திரைக்கதை இருக்கும். இளையராஜா ரசிகனுக்கும், ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகனுக்குமான விஷயங்களை படம் பேசும். படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த 'முஸ்தபா...” பாடலை அனுமதி பெற்று பயன்படுத்தி உள்ளோம். தனுஷ், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பாடல்களை பாடி உள்ளனர். பள்ளி காலத்தில் இருந்தே ஒன்றாக இருக்கும் நண்பர்கள் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் பிரிந்து விடுகிறார்கள். ஆனாலும் அந்த இடத்தை நிரப்ப இன்னொரு நண்பன் வந்து சேர்ந்துவிடுவார். அப்படி சேரும் நண்பனால் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை” என்றார்.