டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியாகிறது 'பூவே உனக்காக'
விஜய் நடித்த 'கில்லி' படம் ரீ-ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றது. வெளியிட்டவருக்கு கோடிக்கணக்கில் லாபம் கிடைத்தது. இதனை கருத்தில் கொண்டு விஜய் நடித்த முக்கியமான படங்களை மறுவெளியீடு செய்ய பலரும் முயற்சி செய்து வருகிறார்கள்.
அந்த வரிசையில் அடுத்து வருகிறது 'பூவே உனக்காக'. இந்தபடம் 1996ல் வெளியானது. இதில் விஜய்யுடன் சங்கீதா, அஞ்சு அரவிந்த், சார்லி, நாகேஷ், நம்பியார், ஜெய் கணேஷ், மதன்பாப் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். விக்ரமன் இயக்கி இருந்தார். படத்தில் இடம் பெற்ற ஆனந்தம் ஆனந்தம், சொல்லாமலே பாடல்கள் இப்போதும் கேட்கப்பட்டு வருகிறது. எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்திருந்தார். சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி. சவுத்ரி தயாரித்திருந்தார்.
தெலுங்கில் சுபகனக்ஷலு, கன்னடத்தில் இஹிருதயநினகாகி மற்றும் இந்தியில் பதாய் ஹோபதாய் என்ற பெயர்களில் ரீமேக் செய்யப்பட்டது. பெரும் வெற்றி பெற்று வெள்ளிவிழா கொண்டாடிய இந்தபடம் அப்போது பிலிமில் தயாராகி இருந்தது. தற்போது அதனை டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றி வருகிறார்கள். வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.