வெங்கல் ராவ்விற்கு உதவிய நடிகர் வடிவேலு : ரூ.1 லட்சம் வழங்கினார்
ஸ்டன்ட் கலைஞராக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் காமெடி நடிகராக வலம் வந்தவர் வெங்கல் ராவ். 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வரும் இவர் வடிவேலுவுடன் பல படங்களில் காமெடி காட்சிகளில் இணைந்து நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் இவர் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், தனது கை கால்கள் செயலிழந்து விட்டதாகவும், வீட்டிலேயே முடங்கி விட்டதாகவும் கூறியவர், அடுத்தவேளை சாப்பாட்டுக்கே வழி தெரியாமல் இருப்பதாக தனது நிலையை தெரிவித்து சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் தனக்கு உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அதையடுத்து முதல் ஆளாக நடிகர் சிம்பு அவருக்கு ரூபாய் 2 லட்சம் நிதி உதவி அளித்தார். அவரைத் தொடர்ந்து காமெடி நடிகர் கே.பி.ஒய்.பாலாவும் வெங்கல் ராவுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்கினார். தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ.25 ஆயிரம் நிதி உதவி அளித்தார். இருப்பினும் வடிவேலு உடன் நடித்த அவருக்கு வடிவேலு உதவி செய்யவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் வடிவேலு தன் பங்கிற்கு ரூ.1 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். அதோடு வெங்கல் ராவ்வை போனில் தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் பற்றியும் கேட்டறிந்தார்.