பிளாஷ் பேக்: அஜித் படத்தில் நடித்த ஜெயலலிதா
தலைப்பை பார்த்த விட்டு ஜெயலலிதா எப்போது அஜித்துடன் நடித்தார் என்று குழம்ப வேண்டாம். இது வேற ஜெயலலிதா. ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் பிரபலமான நாடக நடிகை இவர். இவரும், இவரது சகோதரியும் 100க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளனர், ஆயிரம் மேடைகளை கண்டுள்ளனர்.
தெலுங்கு படங்களில் கவர்ச்சியாகவும், குணச்சித்ர வேடங்களிலும் நடித்து வந்த ஜெயலலிதா, தமிழில் அஜித் நடித்த 'அவள் வருவாளா', கமல் நடித்த 'இந்திரன் சந்திரன்' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். உப்பு, பூவினு, புதிய பூந்தென்னல், தீக்காற்று, பொன்னு, விருத்தம், தூவான தும்பிகள், இஸபெல்லா, ஒரு முத்தச்சி கதா, வைசாலி, இங்குலாபின்றே புத்ரி, ஈனம் தெற்றாத காற்று, அசோகன்றே அஸ்வதிக்குட்டிக்கு, அந்தர்ஜனம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களிலும், சால்யகிரகம், மாமா அல்லுடு, அக்கிரமூடு, கடப்பா ரெட்டம்மா, லாரி டிரைவர், இந்திரஜித், யரா மந்திரம், ஏப்ரல் பஸ்ட் விடுதலா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட தெலுங்குப் படங்களிலும், சில கன்னட, ஹிந்திப் படங்களிலும் நடித்திருக்கிறார்.
சினிமா வாய்ப்பு குறைந்ததும், தெலுங்கு சின்னத்திரை தொடர்களில் நடித்தார். ஜெயலலிதா என்று பெயர் இருந்ததாலேயே தனக்கு தமிழில் வாய்ப்புகள் தர தயங்கியதாக அவரே சில நேர்காணல்களில் தெரிவித்திருந்தார்.