தீபாவளியை டார்கெட் செய்யப் போகும் 'கங்குவா' ?
ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறை நாட்களை பயன்படுத்திக் கொள்ள, அக்டோபர் 10ம் தேதி எங்களது படத்தை வெளியிடுகிறோம் என முதன் முதலில் அறிவித்தது 'கங்குவா' படக்குழு. அதே தினத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' வெளியாகும் அறிவிப்பு வந்தது. உடனே, 'கங்குவா' தள்ளிப் போகும் என பலரும் பேச ஆரம்பித்தார்கள். ரஜினி படம் ஒன்று வெளிவந்தால் அப்படத்துடன் போட்டி போட யாரும் விரும்ப மாட்டார்கள். அப்படம் ஓடுகிறதா இல்லையா என்பதைத் தெரிந்து கொண்ட பின்தான் அடுத்த வாரங்களுக்கான படங்களையும் அறிவிப்பார்கள்.
இந்நிலையில் 'கங்குவா' படத்தின் விஎப்எக்ஸ் காட்சிகள் திட்டமிட்டபடி முடியாத காரணத்தால் அக்டோபர் 10க்குப் பிறகு அக்டோபர் 31ம் தேதி தீபாவளிக்கு படத்தை வெளியிட உள்ளதாக புதிய தகவல் ஒன்று வந்து கொண்டிருக்கிறது. பான் இந்தியா வெளியீடு என்பதால் எந்த சிக்கலும், தாமதமும் இல்லாமல் படத்தை வெளியிட 'கங்குவா' குழுவினர் முடிவு செய்துள்ளதாகச் சொல்கிறார்கள். விரைவிலேயே இதற்கான அறிவிப்பும் வர உள்ளதாம்.
இத்தகவல் தமிழ்த் திரையுலகத்தில் பரவியுள்ளதை விட தெலுங்குத் திரையுலகத்தில்தான் அதிகம் பரவியிருக்கிறது.