உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சென்னையில் அவசர அவசரமாக நடந்த 'தேவரா' நிகழ்ச்சி

சென்னையில் அவசர அவசரமாக நடந்த 'தேவரா' நிகழ்ச்சி


கொரட்டலா சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஜுனியர் என்டிஆர், ஜான்வி கபூர், சைப் அலிகான், கலையரசன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'தேவரா 1'. இப்படம் அடுத்த வாரம் செப்டம்பர் 27ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. தமிழிலும் டப்பிங் செய்து இப்படத்தை வெளியிட உள்ளார்கள்.

நேற்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள பெரிய நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. வழக்கம் போலவே விழாவை தாமதமாகத் துவக்கினார்கள். மொத்த நிகழ்ச்சியையும் வெறும் அரை மணி நேரத்தில் அவசர அவசரமாக நடத்தி முடித்தார்கள். படக்குழுவினர் விமானத்தைப் பிடிக்க வேண்டும் என்பதால் இவ்வளவு அவசரமாக நடத்தப்பட்டது என்று தகவல். நேரத்துடன் ஆரம்பித்திருந்தால் இந்த அவசரத்தைத் தவிர்த்திருக்கலாமே என்று பத்திரிகையாளர்கள் ஆதங்கப்பட்டார்கள். மேலும், படக்குழுவினரை பத்திரிகையாளர்கள் எந்தக் கேள்வியையும் கேட்கவிடாமல் நடத்தப்பட்டது இந்த பத்திரிகையாளர் சந்திப்பு.

அது மட்டுமல்ல, பத்திரிகையாளர் சந்திப்பு என்று சொல்லிவிட்டு ஜுனியர் என்டிஆர் ரசிகர்களை விழா நடந்த அரங்கத்திற்குள் வரவைத்துவிட்டனர். 'ஜுனியர் என்டிஆர்' என மேடையில் சிலர் பேசிய போதெல்லாம் அந்த ரசிகர்கள் 'ஜெய் ஜுனியர் என்டிஆர், ஜெய் ஜுனியர் என்டிஆர்' என கூச்சலிட்டு இது ரசிகர்களுக்காக நடத்திய நிகழ்ச்சி என்று உணர்த்தினார்கள்.

இதற்கு முன்பு 'ஆர்ஆர்ஆர்' படத்திற்கான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்ற போது கூட ஜுனியர் என்டிஆர் ரசிகர்களும், ராம் சரண் ரசிகர்களும் போட்டி போட்டு கூச்சல் போட்டார்கள். தெலுங்கு நடிகர்கள் இப்படி ஏதாவது செய்துவிட்டுப் போக அதைப் பார்த்து தமிழ் நடிகர்களும் இப்படி காப்பியடிப்பது அதிகமாகிவிட்டது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் அழகுத் தமிழில் பேசியதுதான் நிகழ்ச்சியின் ஒரே ஆறுதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !