உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச்

ரசிகர் மன்றம் எதற்கு... ஊரார் பிள்ளையை கெடுக்க விரும்பவில்லை : அரவிந்த்சாமி பளீச்

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் அரவிந்த்சாமி. ஆரம்பத்தில் பல படங்களில் நடித்தவர் தற்போது தனக்கு பிடித்த படங்களில் மட்டுமே நடிக்கிறார். அதிலும் தனது பிசினஸிற்கான நேரம் போக கிடைக்கும் மற்ற நாட்களில் நடித்து வருகிறார். தற்போது கார்த்தி உடன் மெய்யழகன் என்ற படத்தில் நடித்துள்ளார். கிராமத்து ஸ்டைலில் உருவாகி உள்ள இதனை 96 புகழ் பிரேம் குமார் இயக்கி உள்ளார்.

இப்படம் தொடர்பாக அரவிந்த்சாமி அளித்த ஒரு பேட்டியில், ‛‛மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த வேடத்தில் நான் தான் நடிக்க வேண்டியது. ஆனால் கால்ஷீட் பிரச்னையால் நடிக்க முடியவில்லை. ரசிகர் மன்றம் எதற்கு. எனக்கு ரசிகர் மன்றம் துவங்கி என்ன செய்ய போகிறார்கள். ரசிகர்களுக்கு அதனால் என்ன பயன். ஒருவேளை நான் சினிமாவை விட்டு விலகினால் அவர்களின் நிலை என்னவாகும். என் மகன் ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தில் சேர வேண்டும் என கூறினால் அதை நான் ஊக்குவிக்க மாட்டேன். படத்தை பார்த்தையா, ரசிச்சயா அதோடு போய் மற்ற வேலைய பார் என கூறி விடுவேன். என் மகனுக்கு இப்படி சொல்லிவிட்டு நான் ரசிகர் மன்றத்தை வைத்து அதை வளர்த்து மற்றவர்களின் பிள்ளையை கெடுக்க எனக்கு விருப்பம் இல்லை. என் மகனுக்கு ஒரு அறிவுரை, ஊரார் மகனுக்கு ஒரு அறிவுரையை என்னால் தர முடியாது'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !