''இது எனது கனவு'': 'குட் பேட் அக்லி' படத்தில் அஜித்துடன் இணைந்த பிரசன்னா நெகிழ்ச்சி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் 'குட் பேட் அக்லி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தில் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், ராகுல் தேவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் பிரசன்னா இணைந்ததாக தகவல் வெளியானது. இதனை பிரசன்னாவே தற்போது உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த முறை அஜித் சாரின் படத்தில் நான் ஓர் அங்கமாக இருப்பது உண்மை. இது எனது கனவு. 'மங்காத்தா' படம் தொடங்கி ஒவ்வொரு முறை அஜித் படம் அறிவிக்கப்படும் போதும், அதில் நானும் ஒரு அங்கமாக இருந்திருக்க வேண்டியது. ஆனால், அவருடைய ரசிகர்கள் தொடர்ந்து ஊகித்து, அவருடைய அடுத்த படத்தில் இருப்பதாக வாழ்த்தினார்கள். ஆனால் பலரும் கூறுவது போல் 'கிண்ணத்துக்கும் உதடுக்கும் இடையில் பல சறுக்கல்கள்' இருக்கிறது.
நான் 'குட் பேட் அக்லி' படத்தில் அங்கமாக இருக்கிறேன். கடவுள், அஜித், ஆதிக், சுரேஷ் சந்திரா, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் அஜித்துடன் நான் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்ட அனைவருக்கும் நன்றி. இப்போதைக்கு வேறு எதுவும் கூற முடியாது, அதற்கு மன்னிக்க வேண்டும். நான் சில நாட்கள் நடித்துவிட்டேன். என்னால் ஒன்று மட்டும் சொல்ல முடியும். அஜித் அவராகவே இருப்பதற்காக தான் நேசிக்கப்படுகிறார். அவரை பற்றி எனக்கும் உங்களுக்கும் தெரிந்தது தான். அவர் பணிவு நிரம்பியவர். அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.