உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நான் சாய் பல்லவியின் ரசிகன் : சொல்லி மகிழ்ந்த மணிரத்னம், வெட்கத்தால் சிவந்த சாய் பல்லவி

நான் சாய் பல்லவியின் ரசிகன் : சொல்லி மகிழ்ந்த மணிரத்னம், வெட்கத்தால் சிவந்த சாய் பல்லவி

ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் கமல்ஹாசன் தயாரித்துள்ள படம் 'அமரன்'. இந்த படத்தை 'ரங்கூன்' படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார், சாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். போரில் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. முகுந்தாக சிவகார்த்திகேயனும், அவரது மனைவி இந்துவாக சாய்பல்லவியும் நடித்துள்ளனர்.

படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று தனியார் கல்லூரி ஒன்றில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மணிரத்னம் பேசியதாவது:
கற்பனை கதைகளை இயக்குவதை விட நிஜ கதைகளை இயக்குவது மிகவும் கடினம், மிக கவனமாக இருக்க வேண்டும். சிலர் ஒரு சில படங்களில் நடிப்பதன் மூலம், இயக்குவதன் மூலம் புகழ்பெற்ற இயக்குனர்களாக முன்னணிக்கு வந்து விடுகிறார்கள். நான் படிப்படியாக வந்தேன். என்னை போன்றே சிவகார்த்திகேயனும் திடீர் ஹீரோவாக இல்லாமல் படிப்படியாக வளர்ந்துள்ளார்.

சாய் பல்லவி சிறந்த நடிகை. பொதுவாக எந்த கேரக்டர் கொடுத்தாலும் ரியலாக நடிப்பார். இதில் அவர் ரியல் கேரக்டரிலேயே நடிக்கிறார். அவரது படங்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். நான் அவரது ரசிகன். அவருடன் ஒரு படம் பணியாற்ற வேண்டும் என்கிற ஆவலுடனும் இருக்கிறேன். என்றார்.

மணிரத்னம் இப்படி பேசும்போது சாய் பல்லவி வெட்கத்தால் தலை குனிந்தார். தனது ஆச்சர்யத்தையும், இன்ப அதிர்ச்சியையும் வெளிப்படுத்தினார்.

பின்னர் சாய் பல்லவி பேசும்போது “முன்பெல்லாம் எனக்கு சினிமா மீது பெரிய ஆர்வம் இல்லை. அதிகமாக சினிமா பார்ப்பதும் இல்லை. மணிரத்னம் சாரின் 'கன்னத்தில் முத்தமிட்டால்' பார்த்த பிறகுதான் எனக்கு நடிக்கும் ஆசை வந்தது. அதுபோன்ற படங்களில்தான் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவரை சந்திக்க மாட்டோமா என்று பல நாட்கள் ஏங்கி இருக்கிறேன். இன்று அவரை சந்தித்ததே பெரிய ஆச்சர்யமாக இருந்தது. அதிலும் அவர் சொன்ன பெரிய வார்த்தைகள் எனக்குள் இனம் புரியா ஆனந்தத்தை ஏற்படுத்தியது. எனது சினிமா கேரியர் முடிவதற்குள் அவருடைய ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசை எனக்கு இருக்கிறது. அதை அவரிடமே சொல்லிவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் இறைவன் இந்த நாளில் எனது ஆசையை பூர்த்தி செய்து விட்டான். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !