உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கோடீஸ்வரர்களுக்கு பென்சன் ; நடிகர் சங்கம் மீது பிரித்விராஜின் அம்மா குற்றச்சாட்டு

கோடீஸ்வரர்களுக்கு பென்சன் ; நடிகர் சங்கம் மீது பிரித்விராஜின் அம்மா குற்றச்சாட்டு


கடந்த மாதம் கேரளாவில் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மலையாள திரையுலகில் கடந்த பல வருடங்களாக நடந்து வரும் பாலியல் அத்துமீறல்கள், வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது, பெண்களை மரியாதையின்றி நடத்துவது என பல பிரச்னைகள் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியது. இதனை தொடர்ந்து திரையுலகை சேர்ந்த சில பிரபல நடிகர்கள் மீது சில நடிகைகள் குற்றச்சாட்டுகளையும் புகார்களையும் அளித்து வருகிறார்கள். குறிப்பாக மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் சில நடிகர்கள் மீதும் இப்படி பாலியல் குற்றச்சாட்டு புகார் அளிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.

இந்த அறிக்கை வெளியானபோது நடிகர் சங்கத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் மோகன்லால் மற்றும் சில சீனியர் உறுப்பினர்கள் உள்ளிட்ட யாரும் இது குறித்து தங்களது கருத்துக்களை வெளிப்படையாக சொல்ல தயங்கினர். மேலும் நடிகர் சங்கத்தின் தற்போதைய பொறுப்பில் இருக்கும் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர், ஆனால் பலரும் இதை கோழைத்தனம் என்று கூறினர். இந்த நிலையில் சீனியர் நடிகையும் மூத்த நடிகர் சுகுமாரனின் மனைவியும் நடிகர் பிரித்விராஜின் அம்மாவுமான மல்லிகா சுகுமாரன் நடிகர் சங்க செயல்பாடுகள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் காரசாரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் நடைபெற்ற பிறகு தான் திரையுலகில் நடைபெற்று வரும் இது போன்ற சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்தன. ஆனால் அந்த சம்பவம் நடந்து ஏழு வருடம் ஆகிவிட்டது. இன்று வரை அதற்கான நீதி கிடைக்கவில்லை. மலையாள நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து எந்தவித கருத்துக்களும் சொல்லாதது வருத்தம் அளிக்கிறது. சங்கத்திற்குள் நடக்கும் விவகாரங்கள் தலைவரான மோகன்லாலுக்கு தெரியாதா என்ன? சங்கங்களில் எவ்வளவு பாரபட்சம் காட்டப்படுகிறது தெரியுமா? 15 நாட்களுக்கு ஒரு முறை வெளிநாடு சென்று வரும் கோடீஸ்வர நடிகர் ஒருவருக்கு பென்ஷன் கிடைக்கிறது. ஆனால் உண்மையாகவே கஷ்டப்படும் உறுப்பினருக்கு அது கிடைப்பதில்லை” என்று கூறியுள்ளார்.

இதற்கு முந்தைய பேட்டிகளில் கூட முன்பு தனது கணவன் சுகுமாரனை நடிகர் சங்கத்திலிருந்து விலக்கி வைத்தது குறித்தும் தனது மகன் நடிகர் பிரித்விராஜ் நடிகர் சங்கத்தில் புதிய மாற்றங்கள் வர வேண்டும் என குரல் கொடுத்த போதும் நடிகர் சங்கத்தால் ஒத்துழைப்பு மறுக்கப்பட்ட இயக்குனர் வினயனின் டைரக்சனில் அற்புதத் தீவு படத்தில் நடித்ததற்காகவும் மூன்று மாதம் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட விஷயங்களை எல்லாம் பேசி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !