‛இது தான் இந்திய ராணுவத்தின் முகம்' : அமரன் டிரைலர் வெளியீடு
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள படம் அமரன். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர். வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி உள்ளனர். அக்.,31ம் தேதி தீபாவளிக்கு திரைக்கு வரும் இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் படத்தின் டிரைலர் இன்று(அக்., 23) மாலை 6 மணிக்கு வெளியானது.
ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் டிரைலரில் கெத்து காட்டுகிறார். ‛‛ஆர்மி என் ஜாப் இல்ல, என் லைப், இது தான் இந்திய ராணுவத்தின் முகம், ராணுவ வீரராகவும், ராணுவ வீரரின் மனைவியாகவும் இருப்பதும் பெருமை...' போன்ற வசனங்களும், படத்தின் காட்சி அமைப்புகளும், ராணுவ சண்டைக் காட்சிகளும் ரியலாக இருப்பது போன்றும் தெரிவது ரசிகர்களை கவர்ந்துள்ளன.
‛அமரன்' படத்தை பான் இந்தியா படமாக வெளியிட உள்ளனர். அதனால் இதன் டிரைலரையும் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிட்டுள்ளனர்.