'பிளடி பெக்கர்'ஐ 24 மணி நேரத்தில் முறியடித்த 'அமரன்'
தீபாவளி போட்டியில் இன்னும் உயரத் துடிக்கும் நடிகர்களின் படங்கள்தான் போட்டியிட உள்ளன. இருபது வருடங்களுக்கும் மேலாக தனக்கென ஒரு தனி இடத்தை வைத்துள்ள ஜெயம் ரவி நடிக்கும் 'பிரதர்', இரண்டு படங்களின் மூலம் பரபரப்பான கவின் நடிக்கும் 'பிளடி பெக்கர்', குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களை அசைத்துப் பார்த்த சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்' ஆகிய படங்கள் போட்டியில் உள்ளன.
இவற்றில் 'பிரதர்' படத்தின் டிரைலர் இன்னும் வெளியாகவில்லை. கவின் நடித்துள்ள 'பிளடி பெக்கர்' படத்தின் டிரைலர் ஐந்து நாட்களுக்கு முன்பு வெளியானது. அது தற்போது யு டியுப் தளத்தில் 39 லட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அமரன்' படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது. 24 மணி நேரங்களுக்குள்ளாக அந்த டிரைலர் 48 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. 'பிளடி பெக்கர்' டிரைலரின் ஐந்து நாள் பார்வைகளை இந்தப் படம் 24 மணி நேரங்களுக்குள் முறியடித்துள்ளது. இதன் மூலம் டிரைலரைப் பொறுத்தவரையில் சிவகார்த்திகேயன் முந்தி வருகிறார்.
டிரைலருக்கான வரவேற்பு எப்படியிருந்தாலும் படத்திற்கான வரவேற்புதான் முக்கியம். அதற்காக நாம் இன்னும் ஆறு நாட்கள் காத்திருக்க வேண்டி உள்ளது.