'பாடல் அபகரிப்பு' செய்த இயக்குனர் ஷக்தி சிதம்பரம்
சினிமாவில் கதைத் திருட்டு, காட்சித் திருட்டு ஆகியவைதான் அடிக்கடி சர்ச்சையை எற்படுத்தும் விஷயங்களாக இருந்தன. ஆனால், இப்போது 'பாடல் அபகரிப்பு' ஒன்று நடந்திருக்கிறது. அது என்ன 'அபகரிப்பு' என நீங்கள் கேட்கலாம். தெரிந்தே செய்வதற்குப் பெயர் தான் அபகரிப்பு.
“என்னம்மா கண்ணு, காதல் கிறுக்கன், இங்கிலீஷ் பிரதர்ஸ், சார்லி சாப்ளின் 2' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஷக்தி சிதம்பரம் தற்போது இயக்கி வரும் படம் 'ஜாலி ஓ ஜிம்கானா'.
அஷ்வின் வினாயகமூர்த்தி இசையமைப்பில், பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன், அபிராமி, யாஷிகா ஆனந்த், யோகி பாபு மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல் சிங்கிள் நேற்று வெளியானது. “போலீஸ்காரன கட்டிக்கிட்டா…' என்ற அந்தப் பாடல் 18 + இரட்டை அர்த்தப் பாடலாக உள்ளது.
இந்தப் பாடலை பத்திரிகையாளர் ஜெகன் கவிராஜ் எழுதியுள்ளார். ஆனால், நேற்று யூடியூபில் வெளியான பாடலில் இயக்குனர் ஷக்தி சிதம்பரம் பாடல் எழுதியவர் என்பதில் அவரது பெயரைப் போட்டுக் கொண்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அளித்த பத்திரிகை பேட்டி ஒன்றில் கூட இந்தப் பாடலைப் பற்றிக் குறிப்பிட்டு, “சின்ன மச்சான்' பாட்டு மாதிரி பின்னி எடுக்கும்,” எனத் தெரிவித்துள்ளார். அது போலவே பாடல் ஹிட்டாகி விடும் என்பதை யூகித்து அந்தப் பெயர் தனக்கு வரட்டும் என தனது பெயரையே சேர்த்துக் கொண்டுள்ளார்.
இந்த பாடல் திருட்டு குறித்து பத்திரிகையாளர்கள் பலரும் வாட்சப் குழுக்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இயக்குனர் ஷக்தி சிதம்பரத்திற்கு கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். 'என்னங்க சார் உங்க சட்டம்' என்ற படத்தில் இடம் பெற்ற 'ஜீரக பிரியாணி' உள்ளிட்ட சில பாடல்களை ஜெகன் கவிராஜ் எழுதியுள்ளார்.
இந்த பாடல் அபகரிப்பு குறித்து விசாரித்ததில் பாடலை எழுதிய ஜெகன் கவிராஜுக்கும் இயக்குனர் ஷக்தி சிதம்பரத்திற்கும் இடையே படத் தயாரிப்பின் போது நடந்த சண்டைதான் காரணம் என்கிறார்கள்.