'ஏ' சான்றிதழ் படத்தில் 4 ஹீரோயின்கள்
தயாரிப்பாளராக இருந்த ஜே.எஸ்.சதீஷ்குமார் 'தரமணி' படத்தின் மூலம் நடிகர் ஆனார். அநீதி, வாழை, அக்னி சிறகுகள் படங்களில் நடித்தார். தற்போது அவர் இயக்குனராகவும் மாறி தயாரித்து இயக்கும் படம் 'ஃபயர்'. பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சாந்தினி தமிழரசன், சிங்கம் புலி, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பத்மன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். டிகே (அறிமுகம்) இசையமைத்துள்ளார். சதீஷ் ஜி பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. படம் குறித்து சதீஷ்குமார் கூறியதாவது: இப்படம் தமிழகத்தையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தால் உந்தப்பட்ட விறுவிறுப்பான திரில்லர் ஆகும். பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசும் படம். இன்றைய காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்தும் அவர்கள் எவ்வாறு அவற்றை கடந்து வருவது என்பது குறித்தும் மாறுபட்ட கோணத்தில் இப்படம் அலசும். பல பெண்களின் வாழ்க்கையை பேசும் படம் என்பதால் ரச்சிதா, சாக்ஷி, காயத்ரி, சாந்தனி என 4 ஹீரோயின்கள் படத்தில் நடித்திருக்கிறார்கள். தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளது. சமுதாயத்திற்கு தேவையான துணிச்சலான கருத்துடன் உருவாகியுள்ள 'ஃபயர்', வயது வந்த அனைவரும் கட்டாயம் காண வேண்டிய படம். என்றார்.