உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நயன்தாரா திருமண வீடியோ, தாமத வெளியீட்டிற்குக் காரணம் இதுதானா ?

நயன்தாரா திருமண வீடியோ, தாமத வெளியீட்டிற்குக் காரணம் இதுதானா ?

தமிழ் சினிமா உலகின் நம்பர் 1 நடிகையாக இருப்பவர் நயன்தாரா. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'நானும் ரவுடிதான்' படத்தில் நடித்த போது இருவருக்கும் காதல் வந்தது. சில பல வருடங்களாக கிசுகிசுவாகவே நகர்ந்து போனது அந்தக் காதல். அதன்பின் கடந்த 2022ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளையும் பெற்றனர்.

நயன்தாராவின் திருமண வீடியோ ஓடிடி தளத்திற்கு நல்ல விலைக்கு விற்கப்பட்டு, ஒரு டாகுமென்டரி படமாக வெளியாகும் என்று அப்போதே சொல்லப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு கடந்த மாதம்தான் அது பற்றிய அதிகாரப்பூர்வ வெளியீட்டு அறிவிப்பு வந்தது.

'நயன்தாரா - பியான்ட் த பேரி டேல்' என்ற அந்த டாகுமென்டரி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நவம்பர் 18ம் தேதி வெளியாக உள்ளது. இரண்டு வருட தாமதத்திற்கு என்ன காரணம் என்பது இன்று நயன்தாரா வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

“நானும் ரௌடிதான்' படத்தின் காட்சிகளையும், பாடல்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில் உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) பெறுவதற்காக 2 வருடங்களாக காத்திருந்தோம். எங்கள் எல்லாப் போராட்டங்களும் பலனளிக்காத நிலையில், அந்த முடிவையே கைவிட்டு ஆவணப்படத்தில் திருந்தங்கள் செய்தோம்,” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

'நானும் ரெளடிதான்' படத்தின் போதுதான் இயக்குனர் விக்னேஷ் சிவன், கதாநாயகி நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது. அந்தப் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரத்தை வைத்து உருகி உருகி காதல் வார்த்தைகளை வசனங்களாகவும், பாடல்களாகவும் எழுதியிருப்பார் விக்னேஷ் சிவன். 'தங்கமே உன்னைத்தான் தேடி வந்தேன் நானே,' பாடல் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது.

அந்தப் பாடல் இல்லாமல் நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண வீடியோ டாகுமென்டரி முழுமை பெற முடியாது என்பதால்தான் நயன்தாரா, விக்னேஷ் சிவன், தனுஷிடமிருந்து அனுமதி பெற இந்த அளவிற்குப் போராடியிருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !