உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : தமிழகத்தில் பிறந்து இசையால் இந்தியாவை ஆண்ட வாணி ஜெயராம்

பிளாஷ்பேக் : தமிழகத்தில் பிறந்து இசையால் இந்தியாவை ஆண்ட வாணி ஜெயராம்

இந்திய இசை உலகில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்தவர் வாணி ஜெயராம். 1971ல் தொடங்கி ஐந்து தலைமுறைகளுக்கு மேலாக அவரது இசை பயணம் இருந்தது. 1990களின் பிற்பகுதி வரை இந்தியா முழுவதும் பல இசையமைப்பாளர்களின் தேர்வாக இருந்தார். தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், மராத்தி, ஒடியா, குஜராத்தி, ஹரியானா, அஸ்ஸாமி, துளு மற்றும் பெங்காலி போன்ற பல இந்திய மொழிகளில் பாடியுள்ளார். சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய திரைப்பட விருதுகளை மூன்று முறை வென்றுள்ளார். மேலும் ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் குஜராத் மாநில விருதுகளையும் வென்றுள்ளார்.

வாணி தமிழ்நாட்டில் பிறந்தாலும் அவர் முதலில் பாடியது பாலிவுட் படங்களில் ஹிந்தி பாடல்களைத்தான் அதன்பிறகுதான் அவருக்கு தென்னிந்தியத் துறையில் இருந்து வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. 1973ம் ஆண்டில், எஸ்.எம்.சுப்பையா நாயுடுவின் இசையமைப்பில் 'தாயும் சேயும்' படத்திற்காக தனது முதல் தமிழ்ப் பாடலைப் பாடினார். ஆனால் அந்த படம் வெளிவரவில்லை. அடுத்து அவர் 'வீட்டுக்கு வந்த மருமகள்' படத்திற்காக டி.எம்.சவுந்தரராஜனுடன் ஓர் இடம் உன்னிடம் என்ற பாடலை ஷங்கர்-கணேஷ் இசையில் பாடினார். அதுவே அவரது முதல் தமிழ் பாடலானது. அதன் பிறகு அவர் சங்கர்-கணேஷ் இசையில்தான் அதிகமான பாடல்களை பாடி உள்ளார். 10 ஆயிரம் திரைப்பட பாடல்களையும், அதே அளவிற்கான பக்தி பாடல்களையும் பாடி உள்ளார் வாணி.

தமிழ்நாட்டில் பிறந்து இசையால் இந்தியாவையே ஆண்ட வாணி ஜெயராமின் 79வது பிறந்தநாள் இன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !