சினிமா ஸ்டூடியோவில் நடந்த நாகசைதன்யா - சோபிதா திருமணம்
தெலுங்கு இளம் ஹீரோக்களில் ஒருவர் நாகசைதன்யா. அக்னினேனி குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையாக நடித்து வருகிறார். தந்தை நாகார்ஜுனா அவருக்கு பக்க பலமாக இருந்து வருகிறார். நாகசைதன்யாவுடன் சில படங்களில் இணைந்து நடித்த தமிழகத்தை சேர்ந்த சமந்தாவை நாக சைதன்யா காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2017ம் ஆண்டு இவர்கள் திருமணம் பிரமாண்டமாக நடந்தது.
பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2021ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். தற்போது சமந்தா படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இரண்டாவது திருமணம் இப்போதைக்கு இல்லை என்றும், சிங்கிளாக வாழ பிடித்திருப்பதாகவும் அவர் கூறி வருகிறார்.
இந்தநிலையில் நாக சைதன்யாவுக்கும், தமிழில் மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்த பிரபல பாலிவுட் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்தது.
இந்த நிலையில் நாகசைதன்யா-சோபிதா துலிபாலா திருமணம் ஐதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவுக்கு சொந்தமான அன்னப்பூர்னா ஸ்டூடியோவில் நேற்று நடந்தது. இரவு 8.30 மணிக்கு சோபிதா துலிபாலா கழுத்தில் நாக சைதன்யா தாலி கட்டினார். திருமணத்தில் இருவீட்டு குடும்பத்தினர் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.