'புஷ்பா 2'க்கு ஆதரவு குரல் கொடுத்த ஜான்வி கபூர்
அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா 2' படம் இந்திய அளவில் பெரும்பாலான தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. இந்தியாவில் உள்ள பல ஐமேக்ஸ் தியேட்டர்களையும் அப்படமே ஆக்கிரமித்துள்ளது. அப்படத்திற்கு அந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்பதால் தியேட்டர்காரர்கள் தியேட்டர்களை தாராளமாக வழங்கினார்கள். அதை நிரூபிக்கும் விதத்திலும் முதல் நாள் வசூலாக உலக அளவில் 294 கோடிகளையும் அப்படம் வசூலித்துள்ளது.
இதனிடையே, இணையதளம் ஒன்று 'இன்டர்ஸ்டெல்லர்' படத்தின் ஐமேக்ஸ் ரிரிலீஸ் 'புஷ்பா 2' படம் காரணமாக வெளியாகவில்லை என்று செய்தி வெளியிட்டிருந்தது. அதன் சமூக வலைத்தள பக்கத்தில் நடிகை ஜான்வி கபூர் 'புஷ்பா 2' படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து கமெண்ட் செய்துள்ளார். ஜான்வியின் பதிவுக்கு சினிமா ரசிகர்கள் பலரும் லைக் செய்துள்ளனர்.
“புஷ்பா 2 கூட சினிமாதான். மேற்கத்திய விஷயத்தில் ஆர்வம் காட்டுவதிலும், நம் சொந்த நாட்டிலிருந்து வரும் விஷயங்களைக் குறைத்து தகுதி நீக்கம் செய்வதிலும் நாம் ஏன் வெறித்தனமாக இருக்கிறோம். மற்றநாடுகளை பாராட்டுவது மற்றும் பெரிதாகப் பார்ப்பது, அதுவே நம் சினிமாவால் ஈர்க்கப்பட்டால் நாமே வெட்கப்படுவது வருத்தமே,” எனக் குறிப்பிட்டுள்ளார்.