உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : தயாரிப்பாளரை டைட்டில் கார்டில் நக்கலடித்த கே.பாக்யராஜ்

பிளாஷ்பேக் : தயாரிப்பாளரை டைட்டில் கார்டில் நக்கலடித்த கே.பாக்யராஜ்

கே.பாக்யராஜ் என்றாலே அவரது படங்களில் அவர் செய்யும் சின்ன சின்ன குறும்புகள்தான் நினைவுக்கு வரும். அதிலும் 'மௌன கீதங்கள்' படத்தில் அவர் தயாரிப்பாளரையே கிண்டலடித்து தயாரித்த டைட்டில் கார்டை பலரும் மறந்திருக்க கூடும்.

'புதிய வார்ப்புகள்' படம் பாரதிராஜா இயக்கியது. அந்த படத்தில் கே.பாக்யராஜ் குரல் சரியில்லை என்று அவருக்கு கங்கை அமரன்தான் குரல் கொடுத்தார். அதன் பிறகு பாக்யராஜ் இயக்கிய 'ஒரு கை ஓசை', 'சுவரில்லாத சித்திரங்கள்' படங்கள் பாராட்டப்பட்டாலும் பெரிய அளவில் வெற்றி பெற்ற படங்கள் இல்லை. கே.பாக்யராஜ் முதல் வெற்றியை முழுமையாக ருசித்த படம் 'மௌன கீதங்கள்'. அப்படி ஒரு படம் கொடுத்த தயாரிப்பாளர் கோவை பகவதி கிரியேஷன் கே.கோபிநாத்தைத்தான் டைட்டில் கார்டில் கிண்டல் செய்திருப்பார்.

கோவையில் இருந்து கம்பீரமாக காரில் சென்னைக்கு வருவார் பகவதி கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் கே.கோபிநாதன். படத்தின் டைரக்டரான பாக்யராஜ் ஹீரோயின் தொடங்கி படத்தின் அத்தனை டெக்னீஷியன்களையும் அறிமுகப்படுத்தி வைப்பார். டைட்டில் ஆரம்பமாகும். காரில், பிறகு டாக்ஸியில், அடுத்து ஆட்டோவில், அதற்குப் பிறகு நடந்து வருவார் தயாரிப்பாளர். அதாவது பாக்யராஜை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர் எல்லாவற்றையும் இழந்து விடுவதாக அந்த டைட்டில் கார்டு சொன்னது.

அதோடு படத்திற்கு இசை அமைத்த கங்கை அமரன், இளையராஜாவின் இசை குறிப்புகளை திருடி இசை அமைப்பது போன்று காட்டி இருப்பார்.

படம் சூப்பர் ஹிட்டானதும், தயாரிப்பாளர் லட்சம் லட்சமாய் லாபம் அடைந்ததும் அதற்கு பிறகு நடந்தவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !