நான் கணித்தபடியே தான் நடந்தது ; பஹத் பாசில் குறித்து மோகன்லால் சொன்ன தகவல்
மலையாள திரையுலகில் நடிகர் துல்கர் சல்மான் படத்தில் நடிக்க துவங்கிய காலகட்டத்தில் இருந்து டாப் கியரில் வெற்றிகரமான நடிகராக வலம் வர துவங்கி விட்டார். அதே காலகட்டத்தில் அறிமுகமானாலும் நடிகர் பஹத் பாசில், தனக்கு செட்டாகும் என நினைக்கின்ற கதையம்சம் கொண்ட படங்களாக தேர்ந்தெடுத்து தன்னுடைய திரையுலக பயணத்தில் மெதுவாகவே நகர்ந்து வந்தார். அதன் பிறகு மகேஷிண்டே பிரதிகாரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவரது திரையுலக பயணம் சூடு பிடித்தது.
அதன் பிறகு வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். பின்னர் தமிழில் விக்ரம், தெலுங்கில் புஷ்பா என தனது நடிப்பு எல்லையை விரிவுபடுத்தி தற்போது தென்னிந்திய அளவில் தவிர்க்க முடியாத ஒரு நட்சத்திரமாக மாறிவிட்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் மோகன்லால், பஹத் பாசிலின் இந்த வளர்ச்சி குறித்து தனது பேட்டி ஒன்றில் மனம் திறந்து கூறியுள்ளார். “நான் பஹத் பாசிலை பள்ளி செல்லும் சிறுவனாக இருந்த காலகட்டத்தில் இருந்தே பார்த்து வருகிறேன். பின்னர் படிப்புக்காக பஹத் பாசில் அமெரிக்கா சென்றிருந்த சமயத்தில் அவரது தந்தையும் என் குருநாதருமான பாசில் என்னிடம் பஹத் பாசிலை நடிக்க வைக்கலாம் என்று இருக்கிறேன். ஒரு நடிகராக எப்படி தேறுவாரா என்று கேட்டார்.
அதற்கு நான், பஹத் அமெரிக்காவிலிருந்து திரும்பட்டும்.. அவரை நடிக்க விடுங்கள்.. நிச்சயம் சாதிப்பார் என்று சொன்னேன். அன்று நான் கணித்தபடியே தான் இன்று நடக்கிறது. பஹத் பாசில் ஒரு அற்புதமான நடிகராக மாறிவிட்டார்” என்று கூறியுள்ளார் மோகன்லால்.