உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'விடாமுயற்சி' தள்ளிப் போக ஹாலிவுட் பட சிக்கல் காரணமா?

'விடாமுயற்சி' தள்ளிப் போக ஹாலிவுட் பட சிக்கல் காரணமா?


மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், திரிஷா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'விடாமுயற்சி'. இப்படத்தை பொங்கலுக்கு வெளியிடுவதாக அறிவித்து, தற்போது அதிலிருந்து பின் வாங்கிவிட்டனர்.

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித்தின் படம் இப்படி வெளியீடு அறிவிக்கப்பட்டு தள்ளிப் போவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

'விடாமுயற்சி' படம் 1997ல் வெளிவந்த ஹாலிவுட் படமான 'பிரேக்டவுன்' படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. அந்தப் படத்தின் உரிமையை வாங்காமலேயே படப்பிடிப்பை ஆரம்பித்து நடத்தியுள்ளார்கள். இது பற்றிய விவரம் அறிந்த 'பிரேக்டவுன்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான பாரமவுன்ட் பிக்சர்ஸ் 'விடாமுயற்சி' தயாரிப்பு நிறுவனத்தை அணுகியுள்ளது. அதற்கான உரிமையை வாங்கி படத்தை வெளியிடும்படி கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.

ஆனால், உரிமை விலையாக சுமார் 100 கோடி வரை கேட்டதாகவும் கோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வளவு தொகையைக் கொடுத்தால் படத்தின் பட்ஜெட் எகிறிவிடும். போட்ட முதலீட்டை எடுக்க வாய்ப்பில்லை. எனவே, தற்போது 'விடாமுயற்சி' தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ், பாரமவுன்ட் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். அதற்கான சுமூகமான முடிவு எட்ட தாமதமாகிறது என்கிறார்கள். அது பற்றி முடிவு வந்ததும் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிப்பார்களாம்.

இதனிடையே, 'இந்தியன் 2, வேட்டையன்' ஆகிய படங்களின் நஷ்டத்தால் தயாரிப்பு நிறுவனத்திற்கு 'விடாமுயற்சி' வியாபாரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

'விடாமுயற்சி' படத்துக்குத் தீர்வு காண்பதில் தாமதம் ஏற்பட்டால் அஜித் நடித்து முடித்துள்ள மற்றொரு படமான 'குட் பேட் அக்லி' படம் முதலில் வெளிவரவும் வாய்ப்புள்ளது என்று சொல்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !