பிரபாஸ் திருமணத்தை விரும்பாததற்கு காரணம் : மனம் திறந்த அம்மா
நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இந்திய அளவில் மிகப்பெரிய ஸ்டார் ஆகி விட்டார். உலக அளவிலும் அதிக அளவு ரசிகர்களைப் பெற்று நடிகராகவும் மாறிவிட்டார். தொடர்ந்து அவர் நடித்து வரும் படங்கள் வெற்றியோ, தோல்வியோ 500 கோடி, ஆயிரம் கோடி என வசூலித்து வருகின்றன. ஆனால் பாகுபலி படம் வெளியாகி கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகப் போகும் நிலையில் இன்னும் திருமணம் பற்றி வாய் திறக்காமல் இருக்கிறார் பிரபாஸ். அவருக்கும் சக நடிகையான அனுஷ்காவுக்கும் காதல் என்றும் இருவரும் விரைவில் திருமணம் செய்யப் போகிறார்கள் என்றும் சொல்லப்பட்டு வந்தாலும் இருவரும் இதுவரை அது பற்றி வாய் திறக்காமல் மவுனம் காக்கின்றனர்.
இந்த நிலையில் பிரபாஸின் அம்மா சிவகுமாரி தனது மகன் திருமணம் தாமதமாவது குறித்து அளித்த பேட்டி ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இதில் அவர் கூறும்போது, “பிரபாஸிற்கு ரவி என்கிற ஒரு நெருங்கிய நண்பன் இருக்கிறார். ஆனால் அவரது திருமண வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இல்லை. போராட்டங்கள் நிறைந்ததாக கடைசியில் கசப்பான முடிவுடன் அது அமைந்துவிட்டது. பிரபாஸை அது ரொம்பவே பாதித்தது. இதனால் திருமண வாழ்க்கை என்றாலே இப்படித்தான் இருக்குமோ விரைவில் அது முறிந்து விடுமோ என்கிற ஒரு எண்ணம் பிரபாஸின் மனதில் ஆழமாய் பதிந்து விட்டது. அதனாலயே திருமணத்தில் அவர் அவ்வளவு ஆர்வம் காட்டுவது இல்லை. இருந்தாலும் ஒரு நாள் அவர் மனம் மாறும்” என்று கூறியுள்ளார்.