பிளாஷ்பேக் : தனித்து ஜெயித்த மம்பட்டியான்
1983ம் ஆண்டு கமலுக்கும், ரஜினிக்கும் தொடர் வெற்றிப் படங்கள் வெளிவந்தது. கமலுக்கு 'தூங்காதே தம்பி தூங்காதே' ரஜினிக்கு, 'தங்கமகன்' வெள்ளி விழா படங்களாக அமைந்தது. இளமை காலங்கள், மண்வாசனை, உயிருள்ளவரை உஷா படங்களும் சக்கப்போடு போட்டது.
இந்தக் காலகட்டத்தில்தான், ராஜசேகர் இயக்கத்தில், 'மலையூர் மம்பட்டியான்' படம் வெளியானது. மம்பட்டியான் கதாபாத்திரத்தில் தியாகராஜன் நடித்தார். அவரின் ஹேர் ஸ்டைலும், தாடியும், கண்களும் அவரது குரலும் மம்மட்டியான் கேரக்டருக்கு கச்சிதமாக அமைந்தது.
படத்தின் நாயகி சரிதா. மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார். கரகாட்ட கலைஞராக சில்க் சுமிதா கவர்ச்சியாகவும், கண்ணீரை வரவழைக்கும் முடிவாகவும் நடித்திருந்தார். கவுண்டமணியின் வில்லத்தனம் ரசிக்க வைத்தது. இளையராஜாவின் இசையில் எல்லாப் பாடல்களும் சூப்பர் ஹிட்டானது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதே மாதிரியான படங்கள் வந்தது. கொம்பேரி மூக்கன், கும்பக்கரை தங்கையா, கரிமேடு கருவாயன், கோவில்பட்டி வீரலட்சுமி என நாட்டுப்புற சாகச கதைகள் படமானது.