மூக்குத்தி அம்மன் 2வை இயக்காதது ஏன் ? ; ஆர்ஜே பாலாஜி
நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்குனராக மாறி நயன்தாராவை வைத்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு 'மூக்குத்தி அம்மன்' என்கிற திரைப்படத்தை இயக்கினார். அதில் கதையின் நாயகனாகவும் நடித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அப்போது இருந்தே இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் ஆர் ஜே பாலாஜி தரப்பிலிருந்து அது குறித்து எந்த விதமான தகவலும் வெளியாகவே இல்லை.
இந்த நிலையில் தான் சமீபத்தில் 'மூக்குத்தி அம்மன் 2' படம் பிரமாண்ட பூஜையுடன் துவங்கப்பட்டது. சுந்தர் சி இந்த படத்தை இயக்குகிறார். இதனால் ஆர்.ஜே. பாலாஜியிடம் இருந்து இந்த படம் கைநழுவி போனது ஏன் என்று பல விஷயங்கள் யூகங்களாக சொல்லப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் இது குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்து உள்ளார் ஆர்.ஜே பாலாஜி.
“மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியான பிறகு அதன் இரண்டாம் பாகத்தை எப்படி உருவாக்குவது என தயாரிப்பாளர்கள் யோசித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் எனக்கு இரண்டாம் பாகம் குறித்து எந்த ஒரு ஐடியாவும் இல்லை. என்னுடைய எண்ணங்கள் எல்லாம் வேறு கதைகளில், வேறு படங்களில் இருந்தன. இப்போது என்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர் சுந்தர்.சியே இந்த படத்தை இயக்குகிறார் என்பது மிக சரியான விஷயம். இதை அவரிடமே நானும் கூறினேன்” என்று கூறியுள்ளார் ஆர்.ஜே பாலாஜி.