பிளாஷ்பேக்: வெளியான அனைத்து படங்களும் ஹிட்டான தீபாவளி
1983ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி தீபாவளியன்று இயக்குனர் ஏ.ஜெகன்னாதன் இயக்கிய இரண்டு படங்கள் வெளிவந்தன. இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டானது. முதல் படம் 'தங்கமகன்'. ரஜினி, பூர்ணிமா பாக்யராஜ், ஜெய்சங்கர், சில்க் ஸ்மிதா நடித்திருந்தனர். பெரும் வெற்றி பெற்ற இந்த படம் மதுரையில் மட்டும் வெள்ளிவிழா கொண்டாடியது.
இன்னொரு படம் சிவாஜி நடித்த 'வெள்ளை ரோஜா'. இதில் சிவாஜி கிறிஸ்தவ பாதிரியார், போலீஸ் அதிகாரி என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். பிரபு, ராதா, அம்பிகா ஆகியோரும் நடித்திருந்தார்கள். இந்த படமும் 100 நாள் ஓடியது.
இதே தீபாவளியன்று கமல்ஹாசன் நடித்த 'தூங்காதே தம்பி தூங்காதே' வெளிவந்தது. ஏவிஎம் தயாரிப்பில் எஸ்.முத்துராமன் இயக்கிய இந்த படத்தில் ராதா, சுலக்ஷனா உள்பட பலர் நடித்திருந்தார்கள். கமல் இரண்டு வேடத்தில் நடித்திருந்த இந்த படமும் வெற்றி பெற்றது.
இது தவிர டி.ராஜேந்தர் இயக்கிய 'தங்கைக்கோர் கீதம்' படம் வெளியானது. இதில் சிவகுமார், டி.ரஜேந்தர், ஆனந்த பாபு, நளினி நடித்திருந்தார்கள். இதுவும் 100 நாள் படமாக அமைந்தது.
இதுதவிர சுஹாசினி, ராதா, ஊர்வசி நடித்த 'அபூர்வ சகோதரிகள்' என்ற படமும் வெளியானது. ஆர்.தியாகராஜன் இயக்கிய இந்த படமும் வரவேற்பை பெற்றது.