சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு
அரசன் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. வடசென்னை கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் அவர் இரண்டு விதமான கெட்டப்புகளில் நடிக்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்திற்கு பிறகு டிராகன் படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் நடிக்க போகிறார் சிம்பு. நீண்ட காலமாகவே சிம்புவின் திருமணம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாவதும், அதன்பிறகு அது வதந்தி ஆவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. தற்போது திருமணம் குறித்த ஒரு கேள்விக்கு சிம்பு பேசிய ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதில், இன்றைக்கு மொபைல் போன்கள் வந்த பிறகு மனிதன் உணர்வுகள் மாறிவிட்டன. எவ்வளவு வேகத்தில் காதலிக்கிறார்களோ அதே வேகத்தில் பிரியவும் செய்கிறார்கள். எல்லாமே வேக வேகமாக நடக்கிறது. அதேசமயம் ஆழமான உறவுகள் இப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. என்னை பொறுத்தவரை திருமணம் என்பது கட்டாயமில்லை. மனதளவில் நாம் தயாராக இருக்கும்போது மட்டுமே அதை செய்து கொள்ள வேண்டும். இந்த சமூகத்தை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் ஒரு போதும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று தெரிவித்திருக்கிறார் சிம்பு.