உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள், ஆனாலும்….

அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள், ஆனாலும்….


2025ன் ஏறக்குறைய அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களும் வெளிவந்துவிடும் என்று வருட ஆரம்பித்திலேயே பலரும் பல பட்டியலைப் போட்டார்கள். ஆனாலும், முதலாவதாக வந்த முன்னணி நடிகரின் படம் தோல்வியில்தான் முடிந்தது. அஜித் நடித்து வெளிவந்த 'விடாமுயற்சி' தான் அது.

அதற்குப் பிறகு மார்ச் மாதத்தில் விக்ரம் நடித்து வெளிவந்த 'வீர தீர சூரன்' மாபெரும் வெற்றியாக அமையவில்லை என்றாலும் லாபம் தரும் வெற்றியாக அமைந்தது. இடையில் 'டிராகன்' படம் சைலண்டாக 150 கோடியை அள்ளிவிட்டது.

அதற்கடுத்து ஏப்ரலில் மீண்டும் அஜித் நடித்த படம்தான் வெளியாகிறது. தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு இந்த வாரம் ஏப்ரல் 10ம் தேதி 'குட் பேட் அக்லி' படம் வெளியாகிறது. இதற்கடுத்து மே மாதத்தில் சூர்யா நடித்துள்ள 'ரெட்ரோ', ஜுன் மாதம் 5ல் கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ள 'தக் லைப்', ஜுன் மாதம் 20ல் தனுஷ் நடித்துள்ள 'குபேரா' ஆகிய படங்கள் வருகின்றன.

ஆகஸ்ட் 14ம் தேதி 'கூலி' படம் வெளியாகும் என்றும், அக்டோபர் 1ம் தேதி 'இட்லி கடை' வெளியாகும் என்றும் அறிவித்துவிட்டார்கள். இந்தப் படங்களுக்கு இடையில் ஜுலை மாதம் எந்த முன்னணி நடிகரின் படம் வெளியாகும் என்பது இன்னும் முடிவாகவில்லை. அது போலவே செப்டம்பர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களுக்கான முன்னணி நடிகர்களின் படங்கள் எவை வரும் என்பதும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், மாதம் ஒருவரது படம் நிச்சயம் வரும் என எதிர்பார்க்கலாம்.

ஆகஸ்ட் 27ல் விநாயகர் சதுர்த்தி, அக்டோபர் 20ல் தீபாவளி, டிசம்பர் 25ல் கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகை நாட்களுக்கு படங்களை வெளியிட திட்டமிடுவார்கள். மாதம் ஒன்றிரண்டு முன்னணி நடிகர்களின் படங்களுடன் இந்த 2025ம் ஆண்டின் எஞ்சிய மாதங்கள் கடந்துவிடும் போலிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !