உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஐந்தே மாதங்களில் 100ஐத் தொடும் 2025

ஐந்தே மாதங்களில் 100ஐத் தொடும் 2025

2025ம் ஆண்டின் ஐந்தாவது மாதமான மே மாதத்தின் கடைசி வாரத்திற்கு வந்துவிட்டோம். இதன் கடைசி வெள்ளிக்கிழமையான மே 30ம் தேதி வெளியாகும் படங்களுடன் சேர்த்து இந்த வருடத்தில் இதுவரை வெளியான படங்களின் எண்ணிக்கை 100ஐத் தொட உள்ளது.

ஜனவரி மாதத்தில் 26 படங்கள், பிப்ரவரி மாதத்தில் 19 படங்கள், மார்ச் மாதத்தில் 19 படங்கள், ஏப்ரல் மாதத்தில் 11 படங்கள், மே மாதத்தில் 25 படங்கள் என வெளியாகி உள்ளன. கடந்த 2024ம் வருடத்திலும் இது போலவே மாதக் கடைசியில் 100 படங்கள் வரை வெளியாகிவிட்டது. அதன்பின் எஞ்சிய ஏழு மாதங்களில் 130 படங்கள் வெளிவந்து மொத்த எண்ணிக்கை 230ஐக் கடந்தது.

இந்த வருடமும் அது போலவே 200க்கும் அதிகமான படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரத்துடன் 100 கடந்தால், எஞ்சியுள்ள ஏழு மாதங்களில் கடந்த வருடம் போலவே 130 படங்களுக்கும் மேல் வெளியாகி கடந்த வருட எண்ணிக்கையை மிஞ்சுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இனி வரும் மாதங்களில்தான் பல முன்னணி நடிகர்களின் படங்கள் வர உள்ளன. இருந்தாலும் இடையிடையில் சிறிய படங்கள் வந்தால் அந்த எண்ணிக்கை எளிதில் கடந்துவிடும்.

இதுவரை வெளியான 100 படங்களில் “மத கஜ ராஜா, குடும்பஸ்தன், டிராகன், டூரிஸ்ட் பேமிலி” ஆகிய படங்கள்தான் அனைத்து தரப்பிற்கும் நிறைவான லாபம் கொடுத்த படங்கள் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். 'குட் பேட் அக்லி' அவற்றோடு ஒப்பிடும் போது குறைவான லாபம் என்று தகவல். அடுத்து ஏழு மாதங்களில் வரும் படங்களிலாவது லாபம் ஏற்றமாக இருக்கட்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !