''நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்'': எதை சொல்கிறார் மணிரத்னம்?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனக்கென 'எல்சியு' எனப்படும் ஒரு சினிமாட்டிக் யுனிவர்ஸை உருவாக்கியுள்ளார். அதாவது, அந்த யுனிவர்ஸில் உள்ள படங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவும், அதில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் மற்றொரு படத்திலும் தொடர்வதாக அமைக்கப்படும். 'கைதி, விக்ரம், லியோ' ஆகிய படங்களை அவரது எல்சியு யுனிவர்ஸில் இயக்கி வெற்றிப்பெற்றார். தொடர்ந்து கைதி 2, விக்ரம் 2 படங்களை எடுக்கவும் திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 2004ல் வெளிவந்த 'ஆயுத எழுத்து' படத்தில் 3 விதமான நாயகர்களுடன் வெவ்வேறு கதைகளை ஒரே புள்ளியில் சந்திப்பது போல காட்சிப்படுத்தியிருப்பார். இந்த 3 கதைகளையும் தனித்தனியாக எடுத்து ஒரு யுனிவர்ஸாக உருவாக்கலாம் என இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இது தொடர்பான கேள்விக்கு இயக்குனர் மணிரத்னம் கூறியதாவது: ஆயுத எழுத்து படத்தில் வரும் கதைகளை தனித்தனியாக 3 படங்களாக எடுக்கலாம். அந்த அளவுக்கு அதில் கதை இருக்கிறது. இதை தனித்தனியாக எடுத்து ஒரு யுனிவர்ஸாக மாற்றும் எண்ணம் எனக்கு இல்லை. ஒரு படம் எடுக்கவே கடினமாக இருக்கிறது. இதில் யுனிவர்ஸ் படங்களை எப்படி எடுப்பது? அதற்கெல்லாம் நான் பொருத்தமானவன் இல்லை. லோகேஷ் கனகராஜ்தான் சரி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.