கமலுக்கு ஆதரவாக ‛வாய்ஸ்' கொடுக்காத நண்பர்கள், சினிமா அமைப்புகள்
தக் லைப் பட நிகழ்ச்சியில் கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியது சர்ச்சை ஆகியுள்ளது. கர்நாடகாவில் படத்தை வெளியிடமாட்டோம் என்று கன்னட பிலிம்சேம்பர் சொல்கிறது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. படம் அங்கே வெளியாகவிட்டால் பல கோடி இழப்பு ஏற்படும் நிலை.
ஆனால், கமல்ஹாசன் ஆதரவாக பிரபல மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் மகனும், அங்கே பவராக இருக்கும் நடிகர் சிவராஜ்குமார் வாய்ஸ் கொடுத்துள்ளார். மற்றபடி கமலுடன் நடித்த பலர் கப்சிப். அதேசமயம், தமிழகத்தில் கமலின் நெருங்கிய நண்பர்கள் கூட இந்த விவகாரம் குறித்து அறிக்கை விடவில்லை. கமல் படத்தை தடை செய்வோம் என சொல்லக்கூடாது என வேண்டுகோள் விடுக்கவில்லை.
தமிழகத்திலும் பிலிம் சேம்பர் இருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளத்தை சேர்ந்த நிர்வாகிகள் அதில் இருக்கிறார்கள். அந்த அமைப்புக்கு சென்னை அண்ணாசாலையில் பல நுாறு கோடியில் கட்டடம் இருக்கிறது. ஆனால், அவர்களும் கமலுக்கு ஆதரவாக பேசவில்லை.
சினிமா சங்கங்கள் கூட கமலை கைவிட்டுவிட்டன. இப்படி விஸ்வரூபம் உட்பட பல பட ரிலீசில் கமல்ஹாசன் பிரச்னைகளை சந்தித்தார். ஆனால், அதில் போராடி வெற்றி பெற்றார். தக் லைப் படத்திலும் அதுதான் நடக்கப் போகிறது. அங்கே கர்நாடக அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இங்கே தமிழக அரசு கூட, இந்த விவகாரத்தில் நேரடியாக, மறைமுகமாக கமலுக்கு ஆதரவாக பேசவில்லை என்கிறார்கள் கமலின் ஆதரவாளர்கள்.
மன்னிப்பு கேட்க மாட்டேன்
இதனிடையே முதல்வரை சந்தித்த கமல்ஹாசன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்த விவகாரம் குறித்த கேள்விக்கு, ‛‛கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா மீதான எனது அன்பு உண்மையானது. ஒரே கொள்கை உடையவர்கள் இதை சந்தேகிக்க மாட்டார்கள். தவறு செய்து இருந்தால் மன்னிப்பு கேட்பேன். தவறு செய்யவில்லை என்றால் மன்னிப்பு கேட்க மாட்டேன்'' என தெரிவித்துள்ளார்.