உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவனே உத்தரவிட்டு கண்ணப்பா படத்தை எடுத்ததாக உணர்கிறோம் : விஷ்ணு மஞ்சு

சிவனே உத்தரவிட்டு கண்ணப்பா படத்தை எடுத்ததாக உணர்கிறோம் : விஷ்ணு மஞ்சு

கண்ணப்ப நாயனார் வாழ்க்கையை தழுவி தமிழ், தெலுங்கு, கன்னட, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ‛கண்ணப்பா' என்ற பெயரில் படமாக எடுத்துள்ளார் பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு மகனும், பிரபல தெலுங்கு ஹீரோவுமான விஷ்ணு மஞ்சு. பான் இந்தியா படமாக பல மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் மோகன்லால், பிரபாஸ், சரத்குமார், மதுபாலா, மோகன்பாபு, ப்ரீத்தி முகுந்தன் உட்பட பலர் நடித்துள்ளனர். அக் ஷய்குமார் சிவனாகவும், காஜல்அகர்வால் பார்வதியாகவும் வருகிறார்கள்.

சென்னையில் நடந்த இந்த பட விழாவில் பேசிய விஷ்ணு மஞ்சு, ''இந்த படத்தை எடுத்தது எங்கள் பாக்கியம். அப்படி பல அதிசய சம்பவங்கள் நடந்தன. நான் கண்ணப்ப நாயனாராக நடிக்கிறேன். ஒரு மலை, ஒரு ஆறு, அருகில் சிவன், அந்த காலத்தில் கதை நடக்க வேண்டும் என்ற லொகேஷனை தேடிய போது, நியூசிலாந்தில் அப்படியொரு இடம் கிடைத்தது. கடும் குளிர், கடும் வெயிலில் படப்பிடிப்பு நடந்தது. நாங்கள் சிவலிங்கம் அமைத்தபோது அருகே சிலந்தி கூடு கட்டியது. அந்த நிஜ கண்ணப்ப நாயனார் புராணத்துடன் சம்பந்தப்பட்டது. உடனே, முறைப்படி பூஜை செய்து படப்பிடிப்பு தொடங்கினோம்.

இந்தியளவில் முன்னணி நடிகர்கள் இதில் மனதார நடித்தார்கள். காளகஸ்தி புராணம், பாடல்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து பல செய்திகளை எடுத்து சீன்களாக மாற்றி இருக்கிறோம். அக் ஷய்குமார் சிவனா? பலர் கமர்ஷியல் படங்களில் நடித்த காஜல் பார்வதி தேவியா என்று பலர் கேட்கிறார்கள். நான் படம் பார்த்துவிட்டேன். அவ்வளவு பக்காவாக பொருந்தி இருக்கிறார்கள். நீங்களும் பாருங்கள் அதை உணர்வீர்கள். என் மகள்கள், மகன் கூட இந்த படத்தில் நடித்து இருக்கிறார்கள். ஜூன் 27ல் படம் ரிலீஸ். சிவனே உத்தரவிட்டு நாங்கள் இந்த படத்தை எடுத்ததாக உணர்கிறோம்.'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !